130
இலட்சியப் பயணம், தடைபல கடந்து படை பலவென்று, ஆயாச அடவிகளையும், சஞ்சலச் சரிவுகளையும் கடந்து, வெற்றிக் கதிரொளி காணும் இடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
இன்று நம்முன் தோன்றி, நம்மை எலாம் மகிழ்விக்கும் இத்தாயகம், புதியதோர் அமைப்பு அன்று—ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இந்த மாநில முழுதும், மதிப்புப் பெற்றிருந்த மணித்திருநாடாகும். இடைக் காலத்திலே, இடரும் இடியும் தாக்கின, இழிநிலைக்கு இழுத்துச் சென்று அழுத்திவைக்கப்பட்டிருந்தது; இன்று கட்டுண்ட நிலை போயிற்று, தளைகள் நொறுங்கின, தமிழகம் புதிய கோலம் காட்டி நம்மை மகிழ்விக்கிறது.
மக்களாட்சியின் மாண்பும் பயனும் மிகுதியும் மொழிவழி அரசு மூலமே கிட்டும் என்று அரை நூற்றாண்டாகப் பேசி வந்தனர் பேரறிவாளர், போரிட்டனர் ஆற்றல் மிக்கோர், அந்த உயரிய குறிக்கோளை அழித்துவிட முனைந்தனர் ஆணவக்காரர், எனினும், எல்லா இடையூறுகளையும் காலச் சம்மட்டி நொறுக்கித் தூளாக்கிற்று. கருத்துக்கு விருந்தாய் அமைகிறது தமிழகம்.
புதிய தமிழகம்—ஏதேதோ புதுமைகள் நிகழ்ந்திடும் என்று எதிர்பார்த்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்றன்று—அது ஆட்சி அலுவலைச் செம்மையுடையதாகச் செய்விக்கும் ஒரு வசதி தரும் ஏற்பாடு—வேறில்லை—என்று எண்ணுவோர். புதிய தமிழகம் கண்டு, மக்கள் விழாக்கொண்டாடுவதன் கருத்து யாது? அவர்தம் அகமும் முகமும் மலர்ந்திடும் காரணம் என்ன? என்பதறியாது கிடக்கின்றனர். அட்லிக்கும் ஸ்டீவன்சனுக்கும், அபிசீனிய மன்னருக்கும், அயிசனவருக்கும், இது, வெறும் ஏற்பாடுதான்—அரசியல் அலுவலுக்காகச் செய்து கொள்ளப்படும் நிர்வாக அமைப்புத்தான்! அவர்களால், அதற்குமேல் இது குறித்து உணர்ந்திடமுடியாது—அவர்கள் தமிழர் அல்லர் என்ற காரணத்தால். தமிழர்க்கோ, தமிழ்நாடு புதிய அமைப்பாகக் கிடைப்பது, மனஎழுச்சி அளித்திடுவதாகும். முத்தம் வெறும் ‘இச்சொலி’தானே, இதிலென்ன சுவை காண்கிறாய் என்று, தான் பெற்றெடுத்த பாலகனை உச்சிமோந்து முத்தமிடும் தாயிடம் கேட்பார் உண்டா! தமிழர், தமிழகம் கண்டோம் என்று களிநடமாடி, விழாக்கொண்டாடும்போது, இதிலே என்ன பெரிய சுவை கண்டுவிட்டீர்கள், முன்பு இருந்த ராஜ்ய அமைப்பு நிர்வாக காரியத்துக்குக் குந்தகம் விளைவிப்பதாக இருந்தது, அதன் பொருட்டு, இப்போது ‘ராஜ்ய சீரமைப்பு’ செய்துள்ளோம்,