131
இதனாலேயே தமிழர், ஆந்திரர், கேரளத்தார், கருநாடகத்தார் என்றெல்லாம் கருத்திலே உணர்ச்சிகளை வளரவிட்டுக் கொள்ளாதீர்கள்; அனைவரும் இந்தியர், அது நினைவிலிருக்கட்டும், யாவரும் பாரத நாட்டினர், அதனை மறந்துவிடாதீர்கள் என்று நேரு பண்டிதர்கூடப் பேசுகிறார். அவருடைய மனது குளிர நடந்து கொள்வதுதான் இன்றைய அரசியல் சூழ்நிலையில் பலன் அளிக்கும் என்று எண்ணும் பலரும், அது போன்றே பேசிடக் கேட்கிறோம்.
தமிழருக்குத் தமிழகம் அமைகிறது என்பதனால் ஏற்படும் எழுச்சி, எங்கே, ஊட்டிவிடப்பட்டிருக்கும் பாரதம்—இந்தியர்—என்பன போன்ற போலித் தேசீயத்தைத் தேய்த்து, மாய்த்து விடுமோ, புதிய தமிழகம் என்று பூரிப்புடன் பேசத்தொடங்கி, தாயகம் என்று பெருமையுடன் பேசத் தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம், எல்லாத் தேசீய இனங்களையும் ஒரே பட்டியில் அடைத்து, எதேச்சாதிகாரத்தால் ஆட்டிப்படைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்போருக்கு இருக்கத்தான் செய்கிறது. எனவேதான் அவர்கள், அட்லிபோலவும், அபிசீனிய மன்னர் போலவும், இதெல்லாம் நிர்வாக ஏற்பாடு என்று கூறுகின்றனர். மாலை விலை ஆறணா என்பது மட்டுந்தான், மலர் விற்போனால் அறிய முடிந்தது—அதனை மங்கை நல்லாளுக்காகப் பெறுகிற மணவாளன் அல்லவா அறிவான், மாலையைக் கண்டதும் கோலமயில் சாயலாள், குமுதவிழிப் பாவையாள், பாகு மொழியாள், அடையும் மகிழ்ச்சி எத்துணை சுவையுள்ளது என்பதனை. தமிழகம் புதிய அமைப்பாகிறது என்பதிலே காணக்கிடைக்கும் எழுச்சியைத் தமிழர் மட்டுமே முழுதும் பெறமுடியும்—மற்றையோர் முயற்சித்தும் பலன் இல்லை. ஓரளவுக்கு இந்த இயற்கையை அறிய முடிந்ததனாலேயே, நேருபண்டிதர், காந்தியார் காலத்திலே வாக்களிக்கப்பட்ட திட்டமாகிய மொழிவழி அரசு பற்றி முகத்தைச் சுளித்தபடி பேசவும், அது என்ன பித்தம் என்று கேலி செய்யவும், அது வெறி அளவுக்குச் சென்றுவிடாமற் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை ஏவவும் முற்பட்டார். உலக அரங்கிலே காணக்கிடக்கும் பிரச்சினைகளை அறிந்தவர், உயர்நிலையில் அமர்ந்திருக்கும் நேருபண்டிதர். தேசீய இன எழுச்சி வரலாறுகளைத் தெரிந்தவர். அழுத்திவைக்கப்பட்ட தேசீய எழுச்சி, என்றேனும் ஓர் நாள் வெடித்துக் கிளம்பிடும் என்ற பேருண்மையை அறிந்தவர். பல தேசீய இனங்களை தலைதூக்கவிடாதபடி அடக்கி ஒடுக்கி ஆட்சி நடாத்தியோர் இறுதியில், என்ன கதியாயினர் என்பதைப் படித்திருக்கிறார். தேசீய இன எழுச்சியை அலட்சியப் படுத்தும், அறிய