உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

மறுக்கும், அப்பாவிகள் பட்டியலில் அவர் பெயரை அறிவிலியும் சேர்த்திடத் துணியமாட்டான். அவர் காண்கிறார், மேலை நாடுகளிலே, காலம் கிடைத்ததும், புயலெனக் கிளம்பிடும் தேசீய இன எழுச்சிகளை. எனவே, நேருபண்டிதர், ‘மொழிவழி அரசு’ எனும் திட்டத்தை அமுலாக்குவதில், தாமதம், தயக்கம் காட்டினார், காலத்தை ஓட்டினார், பிறகு கட்டுக்கு அடங்காத நிலைகிளம்பும் என்பதற்கான குறிதோன்றியதும், மொழிவழி அரசு எனும் திட்டத்தை மூளியாக்கியே தந்திருக்கிறார். மூளியாக்கப்பட்ட நிலையிலும், மொழிவழி அரசு என்பது, புதியதோர் நம்பிக்கையை, ஊட்டும் என்பதையும் அறிந்து, பாரதத்தை மறவாதீர்! இந்தியர் என்பதை நினைவிலே கொள்ளுங்கள்! இதெல்லாம் வெறும் நிர்வாக ஏற்பாடு! என்று பன்னிப் பன்னிக் கூறுகிறார்—அவருக்குப் பக்கம் நின்று அதே பல்லவியைப் பாடப் பல கட்சிகள் உள்ளன.

வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரதமணித் திருநாடு!

என்று அவர்கள் கீதம் இசைப்பது அனைவரும் வாழவேண்டும் என்ற நல்லறத்தைக் கூறுவதற்காக மட்டுமல்ல—தமிழர்காள் தமிழகம் பெறுகிறீர்கள்! புதிய அமைப்பு! விழாக் கொண்டாடுகிறீர்கள்! உற்சாகம் பெறுகிறீர்கள்! அதுவரையில் சரி—ஆனால் இந்த உற்சாகத்தை உறுதுணையாக்கிக்கொண்டு தனி அரசு என்று பேச ஆரம்பித்துவிடாதீர்கள்—பாரதமணித் திருநாட்டை வாழ்த்துங்கள்!—என்று கூறி, கட்டிவிடப்பட்டிருக்கும் அந்தப் போலித் தேசியத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடனும்தான், பாடுகின்றனர். பாரத மணித்திருநாடு என்று பாடுவதும், சொந்தம் கொண்டாடுவதும், பரந்த மனப்பான்மை, பண்புக்கு அறிகுறி; தமிழ்நாடு என்று மட்டும் கூறிக்கிடப்பது குறுகிய மனப்பான்மை; கிணற்றுத் தவளைப்போக்கு, அறிவீரா? என்று வாதாடுவோர் உளர்! தம்பி! விரிந்து பரந்த மனப்பான்மையைத் தமிழருக்கு எவரும் புதிதாகக் கற்றுத்தர வேண்டியதில்லை! பாரில் இந்தப் பண்பு பேச்சளவுக்கேனும் வளருவதற்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பே ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று பாட்டு மொழியிற் கூறிய பண்பாளர் தமிழர்! எனவே, பரந்த மனப்பான்மையைத் தமிழர்க்கு அளித்திட ஆசான்கள் தேவை இல்லை—தமிழருக்கு அந்தப் பாடத்தைக் காட்டி, ஓர் பேரரசுக்குக் குற்றேவல் புரியும் எடுபிடியாக்கிடவே முனைகின்றனர் என்று ஐயப்பாட்டுக்கிடமின்றித் தெரிகின்றபோது, எங்ஙனம் அதனை நீதிநெறி விளக்கமென்று கொள்ள முடியும்.