133
போராற்றலால் பெற்ற வெற்றிகளைப் பேரரசு அமைத்திடப் பயன்படுத்தியவர்களிலே பலரும், தமது இருப்புக்கரத்தின் மூலமே, அந்தப் பேரரசுகளை முடிந்த வரையில் கட்டிக் காத்தனர்—பிறகோ, தேசீய இன எழுச்சி சூறாவளியாகி, சாம்ராஜ்யங்களைச் சுக்கு நூறாக்கி விட்டிருக்கிறது.
கிரேக்க சாம்ராஜ்யம், ரோமானிய சாம்ராஜ்யம், உதுமானிய சாம்ராஜ்யம் என்பவைகளெல்லாம் இன்று பாடப் புத்தகங்கள்—படித்து அதுபோல் சாம்ராஜ்யங்கள் கட்டப் பயிற்சிபெற அல்ல—பேரரசு வேண்டும் என்று தோன்றும் மன அரிப்பை அடக்கிக் கொள்வதற்கான பாடம் பல பெற!
நேரு பண்டிதர் இந்த உண்மைகளை நன்கு அறிவார்—அறிந்த காரணத்தாலேயே, அவர், மிகச் சாமர்த்தியமாக நடந்துகொள்வதாக எண்ணிக் கொண்டு, பல்வேறு முறைகளாலும், மறைமுக வழிகளாலும், பாரதம் எனும் பேரரசுக்குள்ளே அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பல்வேறு தேசீய இனங்களையும், தத்தமது தேசியத்தன்மையை, நினைப்பை இழந்துவிடச் செய்யப் பார்க்கிறார். இதனை எதேச்சாதிகாரியின் குரலிலே அவர் கூறவில்லை — வரலாறு தெரிந்திருப்பதால்—இனிக்கப் பேசினால் இளித்துக் கிடப்பர் என்று திட்டமிட்டுக் காரியமாற்றி வருகிறார்! கேட்போருக்கு மன மயக்கம் ஏற்படச் செய்யும் விதமான பிரசாரம் நடத்தி, இந்தியா—இந்தியர்—என்பன போன்ற கற்பனைகளைக் கவர்ச்சிகரமானதாக்கிக் காட்டி, போலித் தேசீய போதையை ஊட்டி, தமிழர் போன்ற தேசீய இனத்தவர்களை, தாசர்களாக்கிடப் பார்க்கிறார். மொழி, கலை, ஆகியவற்றால் தனித் தன்மை பெற்றிருப்பதை அழித்திட இந்தியை ஏவுகிறார்...சல்லாபி வடிவத்தில்!! இந்தியை, அஞ்சல் நிலையத்திலும், அங்காடி அலுவலுக்கும், அரசாங்க காரியத்துக்கும், புகுத்தும் நேரத்திலேயும், தமிழ் என்ன சாமான்யமானதா, உயர்தனிச் செம்மொழி என்று மொழி வல்லுநர் பலர் கூறக் கேட்டுள்ளேன், இந்திமொழி தமிழ் கொலுவிருக்கும் இடத்தருகேயும் வரத் தகுதியற்றது, என்றாலும், வசதிக்காக, நிர்வாக ஏற்பாட்டுக்காக, பாரதத்தின் ஐக்யத்துக்காக இந்தியைத் தேசீய மொழியாகக் கொள்ளத்தான் வேண்டும் என்று பேசுகிறார்.
கிழப்புலி பொன்காப்பு காட்டிய கதை படிக்கிறார்களல்லவா, சிறார்கள்; அதுபோல, எதேச்சாதிகாரம் கிழடுதட்டிய பருவத்திலே இவ்விதமான போக்குத்தான் கொள்ளும்.