உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

நேரு பண்டிதர் இந்த வகையிலே, தம்பி, மிகத் திறமையாகப் பணியாற்றி வருகிறார்—என்றாலும் அவருக்கும், உள்ளூரத் தெரிகிறது, எத்தனை முறைகளைப் புகுத்தினாலும் தேசிய உணர்ச்சி அழிந்து படாது என்ற உண்மை. மொழிவழி அரசு எனும் திட்டம், மெத்தச் சிரமப்பட்டுத் தாம் தயாரிக்கும் போலித் தேசியத்தை நாளா வட்டத்திலே நைந்துபோகச் செய்துவிடும் என்று அவருக்குப் புரிகிறது. எனவேதான் அவர், மொழி அரசு என்ற பிற்போக்குத் திட்டம் கூடாது, ஆகாது என்று அடிக்கடி பேசுகிறார். இதோ, புதிய தமிழக அமைப்புக்கு, விழா நடத்தப்படுகிறதே, இதன் உட்பொருள் என்ன? கம்யூனிஸ்டுக்கு இந்த விழா மகிழ்ச்சி தருவானேன்? பொது உடைமை பூத்தாலன்றோ விழா, கம்யூனிஸ்டு சித்தாந்தப் படி! புதிய தமிழக அமைப்பினைத் திருநாள் ஆக்கி மகிழக் காரணம்? இதனை அறியாயோ, பேதாய்! பேதாய்! புதிய தமிழக அமைப்பு, பொது உடைமை அடைவதற்கான பாதையிலே ஓர் கட்டமாக்கும்! என்று கடிந்துரைப்பர் கம்யூனிஸ்டுகள்! தம்பி! அவர்கள் கோரும் கம்யூனிசம், பாரதம் முழுவதற்கும்—எனவே, அதிலே, தமிழகம் என்று ஓர் எல்லை தேவைகூட இல்லை! எனினும் எல்லை கிடைத்து, புதிய தமிழகம் எனும் அமைப்பு ஏற்பட்டதும் அவர்கள் மகிழத்தான் செய்கிறார்கள் - மகிழ வாரீர் என்று மக்களையே கூட அழைக்கிறார்கள்! ஏன்? அவர்களையும் அறியாமல் அவர்களை ஆட்கொண்டிருக்கும், தேசீய இன உணர்ச்சி என்பதன்றி வேறென்ன! அவர்களிடம் கூறாதே, தம்பி. நாம் கூறுவதனாலேயே அவர்களுக்கு அது கசக்கும், அவர்கள் போலந்து ஹங்கேரி இப்படிப்பட்ட இடங்களிலே வெடித்து, சிதறி, இங்கு வந்து துண்டு துணுக்குகள் வீழ்ந்த பிறகுதான், இவைகளை உண்மைகள் என்று மதிப்பளிக்க முன் வருவார்கள். நாம் சொல்லியா ஏற்றுக் கொள்வார்கள்!

புதிய தமிழக அமைப்பு, எல்லாக் கட்சியினருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆச்சாரியார் மட்டும் பாபம், துக்கமாக இருக்கிறார்!

ஐயோ! மெலிந்துவிட்டதே! சிறியதாகிவிட்டதே! சென்னை ராஜ்யம் என்றிருந்தபோது, எவ்வளவோ பெரிதாக இருந்தது—இப்போது ஆந்திரம், மலையாளம், இவை பிரிந்த நிலையில், தமிழ்நாடு என்பது சிறிய அளவாகி விட்டது—என்று வருத்தப்படுகிறார்.