135
அவருக்கு இது விழாவாக இல்லை; விசாரப்படுகிறார்!
காரணம் காட்டாமலிருக்கிறாரா? அவராலா, முடியாது? காரணம் தருகிறார்!
பாரதத்தில். தமிழ்நாடு எனும் அமைப்பு மிகச் சிறிய ராஜ்யம்—அதனால் அதற்குச் செல்வாக்கு மத்திய சர்க்காரில் இருக்காது—பாரதத்தில் உள்ள மற்ற ராஜ்யங்கள் அளவில் பெரிது, அவைகளின் செல்வாக்கு மிகுதியாக இருக்கும் என்று ஆச்சாரியார் காரணம் காட்டுகிறார்.
ஆச்சாரியாரும் நமது கம்யூனிஸ்டு நண்பர்கள் போலவே, ‘பாரதம்’ எனும் திட்டத்தை ஏற்றுக்கொண்டுதான் பேசுகிறார்.
பாரதத்தில் ஓர் அங்கமாக, தமிழ்நாடு இருக்கிறது, இதன் பலனாக, எதிர்காலம் ஒளியுள்ளதாகும் என்பது கம்யூனிஸ்டு களிப்புடன் காட்டும் வாதம்.
கவலையுடன் ஆச்சாரியார் கூறுவது, பாரதத்தில் ஓர் அங்கமாக அமையும் சென்னை ராஜ்யம், அளவில் மிகச் சிறியது, எனவே அதற்கு மத்திய சர்க்காரில் மதிப்பும் செல்வாக்கும் கிடைக்காது, என்பதாகும்.
சரி, அண்ணா! காமராஜர் என்ன கருதுகிறார் என்று என்னைக் கேட்டுவிடாதே தம்பி. நான் இப்போது, சிந்தித்துக் கருத்தளிக்கக் கூடியவர்களைப்பற்றிக் கூறுகிறேன்; எஜமானர்களின் உத்தரவை நிறைவேற்றி வைக்கும் ஊழியம் செய்து வரும் சம்பளக்காரர்களைப்பற்றி அல்ல.
காமராஜரைத்தான் நாடு நன்றாக அறிந்துகொண்டு வருகிறதே! குளமாவது, மேடாவது! என்பவர்தானே, அவர்!!
ஏதோ, நேரு பெருமகனார் சம்மதமளித்ததால், குமரி கிடைத்தது! ‘இல்லை’ என்று டில்லி கூறிவிட்டிருந்தால் இவர் என்ன சீறிப் போரிட்டா பெற்றிருப்பார்! குமரியாவது கிழவியாவது, உள்ளது போதும், போ, போ! என்றல்லவா பேசுவார்! இனி சிந்தித்துக் கருத்தளித்திடுவோர் குறித்துக் கவனிப்போம் வா, தம்பி, நமக்கேன், நாடாள்வதால் நாலும் செய்யலாம் என்ற போக்குடன் உள்ளவர் பற்றிய கவலை.
பாரதம் என்ற பேரரசு இருக்கும்—புதிய தமிழகம் அதிலே ஓர் ராஜ்யம்—என்ற ஏற்பாடு, நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற கருத்துடன்தான், கம்யூனிஸ்டும் ஆச்சாரியாரும் பேசுகின்றனர்.