147
கனம்.சுப்பிரமணியனாரோ, தனக்குப் பெரியார்மீது மட்டுமல்ல திராவிட இயக்கத்தின்மீதே உள்ள, ‘துவேஷத்தை’க் கூட்டம் தவறாமல் கக்குகிறார், கூட இருப்பவர்கள், மெத்த நாற்றமடிக்கிறது என்று கூறித் தடுக்கும் வரையில் கக்கித் தீர்க்கிறார்.
அவர் இருக்கிறாரே, பக்தவத்சலனார்—சொல்லத்தேவை இல்லை! மக்கள் பார்த்து, சட்டசபைக்கும் செல்லவிடமாட்டோம் என்று கூறி, தேர்தலில் தோற்கடித்தார்கள். எம். எல். ஏ. ஆகத்தானே கூடாது என்றீர்கள், இதோ பாருங்கள் மந்திரியே ஆகிவிடுகிறேன் என்று ஜனநாயகம் செய்து காட்டிய பெருந்தகையாளர்!
இந்த மூவரும் முரசுகொட்ட, ஊர்பல சென்றனர். உள்ளத்துக்கு உற்சாகம் பொங்குமளவுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏசினர்—நான் தான் இருக்கிறேனே ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பார்களே, அதுபோல; என்னை எடுத்து அலசி, ஆராய்ந்து, உரைத்து, நிறுத்து, தூக்கி எறிந்துவிட்டார்கள், கீழே!
வடக்கு—தெற்கு என்று பேசுவது அபத்தம்—ஆபத்து—தீது—அப்படி ஒரு பிரச்சினை கிடையாது.
அப்படியே ஒன்று இருந்தாலும், அதைக்கண்டு அச்சம் கொள்வது கோழைத்தனம்.
இந்த தி. மு. க. கோழைகள்; வெள்ளைக்காரனுக்குக் குலாம்கள்!
இவர்களை ஒழித்துவிடுவோம், அழித்துவிடுவோம்.மூவர் முரசும் இதைத்தான் ஒலித்தன! இதை ஒலிக்கமட்டுமே இவர்கள் பயின்றுள்ளனர்.
ஆனால் மக்கள் வேறுபல இசைகளைக் கேட்டுப் பழக்கப்பட்டுப் போய்விட்டனர்.
“அண்ணாத்துரை கிடக்கிறானய்யா, அமைச்சர் பெருமக்களே! உங்கள் சங்கதி என்ன? நாடு ஆளும் வாய்ப்பு அளித்தோம், நாங்கள் கண்டது என்ன? வரிச்சுமையைத் தாங்கித் தத்தளிக்கிறோம், வாட்டம் ஓட்டிட நீவிர் வகுத்தளித்தது என்ன? தி. மு. க. இதைச் சொல்கிறது கேளாதீர், அதைக் கூறுகிறது நம்பாதீர் என்று எங்களுக்குப் போதனை புகட்டியது கிடக்கட்டும்”—நாங்கள்,