146
மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு, ஆணவமாக எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் வாய்ப்பை இழக்க மனம் வருமா! பில்லை போட்ட சேவகர்கள் எத்துணை பேர்! பிரியத்தைக் கொட்டிடத் துடிப்போர் எத்துணை! சீமான்கள், கட்டியங் கூறி நிற்கிறார்கள், காளையையும் தன்னையும் ஒரே விதமாகப் பார்த்து வந்த பட்டக்காரர்களெல்லாம், ‘கனம்’ ஆன பிறகு, கைலாகு கொடுக்கிறார்கள். கொடுத்துவிட்டு, கை வலிக்கிறதோ!—என்று கனிவுடன் கேட்கிறார்கள்! இந்தச் சுகானுபவத்தை இழக்க மனம் வருமா! தோட்டக் கச்சேரிகள், அதிலே வந்து கலந்துகொள்ளும் துதிபாடகர்கள்! மாநாடுகள், அதிலே, மதிப்பளிக்க வரும் மகானுபாவர்கள்! கலைக் காட்சியைத் திறந்திட, கானமழையில் நனைந்திட ‘கனம்’ ஆக இருந்தால், தனிக் கவர்ச்சி காணலாமே! இசைவாணரிடமே இசை இலக்கணம் பற்றிப் பேசி, ஆசான் கோலமே காட்டலாம்! தமிழ்ப் பேராசிரியரிடமே, தமிழ்மொழியில் என்ன இருக்கிறது என்று கேட்டுவிட்டு, அவர் முகம் சுளிக்கிறதா என்றுகூடக் கவனிக்கலாம்? நடனக் கச்சேரிகளில் தலைமை தாங்கி, “மனிதனைத் தேவனாக்கும் மதுரமான கலை! அம்பலத்தானின் அடிபணியும் பக்தியை ஊட்டும் லளிதக் கலை! கண்டேன்! களிப்புக் கடலில் மூழ்கினேன்! அந்தக் கட்டிளங்குமரியின் கடை வெட்டினையும் இடை நெளிவையும் கண்டபோது, நான் கைலை சென்றது போன்றே களிப்புப்பெற்றேன்” என்று பேசலாம்! தம்பி! இவ்வளவு இன்பம் கூட்டித்தரும் பதவியை இழக்க அவர் என்ன இளித்த வாயரா?
கல்வித்திட்டம் வேண்டாம் என்கிறீர்கள், அவ்வளவு தானே! உங்களுக்குக் கல்வித்திட்டம் பிடிக்கவில்லை, நான் அல்லவே! சரி! கல்வித்திட்டம் வேண்டாம்! அதைக் குழிதோண்டிப் புதைக்கத்தானே வேண்டும், உமக்கு ஏன் அந்தச் சிரமம், நானே செய்கிறேன்—எனக்குத்தான் அந்தக் குழி எத்துணை ஆழமாக இருக்க வேண்டும் என்பது தெரியும் என்று கூறினார்போலும், பதவியில் ஒட்டிக்கொண்டார்!
அப்படிப்பட்ட தன்மானம் ததும்பும் மனம், தம்பி, இந்த அருமை அமைச்சருக்கு!
அவருடன், காமராஜர்! ஊரிலே, பெரியார் பேசுவதோ, நான், கனம். சுப்பிரமணியம் ஆச்சாரியாரின் கை ஆளாக இருந்துகொண்டு, என் காமராஜரைக் கவிழ்த்து விடாதபடி பாதுகாப்பு அளித்து வருகிறேன், என்பதாகும்.
காமராஜர், பெரியார்மீது அன்பும் பொழிவதில்லை, வம்புக்கும் நிற்பதில்லை.