உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

பெரியாரின் ஆய்வுரை. அவர் கூறுவதற்கேற்பவே, காமராஜர் தட்சிணப்பிரதேசம் கேட்பவர்களைத் தாக்கிப் பேசினார், சுப்பிரமணியனார், தட்சிணப்பிரதேசத்தின் அவசியத்தைச் சிலர் உணராமலிருக்கிறார்களே, என்ன அறிவீனம் என்று கேலி பேசுகிறார்.

ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்துக்கு, கனம். சுப்பிரமணியம் தாலாட்டும் பாடினார், பிறகு அதை அவரே சவக்குழியில் புதைத்துவிட்டு, ஒப்பாரி வைத்தாலும், பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தால், ஒரு சொட்டுக் கண்ணீரும் விடாமலிருந்துவிட்டார்.

ஆச்சாரியார் காலத்திலே, இந்த ஆற்றல்மிக்க அமைச்சர், கொதித்ததையும் குதித்ததையும், நாடு கண்டது. குலக்கல்வித் திட்டத்தை இந்தக் கொள்கை வீரர், விட்டுக்கொடுக்கவேமாட்டார், பதவிப் பிசின் அவரை ஒன்றும் செய்யாது, தன்மானம் பெரிது, கேவலம் பதவி அல்ல என்று கருதும் தமிழர் இவர், இவரிடம் கொங்குநாட்டு உறுதிப்பாடு உள்ளத்தில் குடிகொண்டிருக்கிறது என்று பலரும் கருதும்படி பேசினார்—மறுப்புக் கூறினோரை ஏசினார்! கல்வித்துறையில் இந்தத் திட்டத்தைப் புகுத்தாவிட்டால், இந்த ‘ஜென்மம்’ கடைத்தேறாது என்று ‘கர்ஜனை’ செய்தார்.

நாடு சீறிற்று—காமராஜர் கண் சிமிட்டினார்—காங்கிரஸ் கமிட்டிகளே களமாயின! ஆச்சாரியார் கவிழ்ந்தார்—காமராஜர் துறவறத்தைத் துறந்து, தமது ஓய்வைத்தியாகம் செய்துவிட்டு, பதவியில் வந்து அமர்ந்தார்; பக்கத்திலேயே பல்லை இளித்துக்கொண்டு நின்றார் இந்தப் பண்பாளர்! நான், நாட்டுக்குத் தந்த நல்ல திட்டத்தை, ஆயிரம் எதிர்ப்புகளையும் கண்டு நான் அஞ்சாமல் திணித்த இந்தத் திட்டத்தைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்ட இந்த அமைச்சர் அவையில் நான் இடம் பெற்றால், எவர்தான் என்னை மதிப்பர், காலம் முழுவதும் கைகொட்டிச் சிரிப்பரே, பதவி மோகம் விட்டதா பார் என்று கேலி பேசுவரே, நான் எப்படி இந்த அமைச்சர் அவையில் இருக்கலாம்—வேண்டேன்! என்று கூறிவிட்டு, கோவை சென்று, வக்கீல் வேலையை விட்ட இடத்திலிருந்து துவக்குவார், குருநாதர் இராமாயணம் பற்றி எழுத, இவர் பாரதம் பற்றி எழுதுவார், என்று பலரும் எதிர் பார்த்தனர்.

ஆனால் அமைச்சர் பதவி என்ன சாமான்யமானதா! அந்த வெல்வட்டு மெத்தையின் சுகம் வேறு எங்கு கிடைக்கும்! ஆனந்தமாக அங்கு அமர்ந்துகொண்டு, அலட்சியமாக