உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

இருந்த அஞ்சா நெஞ்சம், நம்மில் ஒவ்வொருவருக்கும் தேவை—எங்ஙனம், கயவர்களிடம் கத்தி இருக்கிறதே, காட்டுக் கூச்சலிடுகிறார்களே, துப்பாக்கி இருக்கிறதே, துடுக்குத்தனமாகத் தாக்குகிறார்களே, என்பதுபற்றித் திகில் கொள்ளாமல், அந்த மங்கையர் திலகம், கொடியவனின் கொடுவாளைப் பறித்து எறிந்தாளோ, அதுபோல் செயலாற்ற, நமக்குத் துணிவுவேண்டும். ஏனெனில், துரைத்தனத்தில் அமர்ந்துள்ளவர்களிடம், படைக்கலன்கள் மிகுதியாக உள்ளன என்பது மட்டுமல்ல, அவர்களில் மிகப்பலருக்கு, வெறி அளவுக்கு நம்மீது கோபம் பிறந்துவிட்டிருக்கிறது. அதிலும் நம்மை எல்லாம் ஆளாக்கிவிட்ட பெரியாரையே அன்புக் கயிற்றினால் கட்டிப்போட்டுவிட முடிந்தது, இந்தப் ‘பொடியன்கள்’ அல்லவா போரிடக் கிளம்புகிறார்கள் என்று எண்ணும்போதே, அவர்களுக்குக் கோபம் கோபமாக வருகிறது. அது நமக்கு நன்றாகப் புரிகிறது! கடந்த பத்து நாட்களாக, பவனி வரும் ‘மூவர்’ செல்லுமிடமெல்லாம் சீறிச் சீறிப் பேசுகிறார்கள் — இதுகளை ஒழித்துக்கட்டுவோம் என்று உறுமுகிறார்கள்! தேர்தலுக்காகச் செலவிடத் தம்மிடம் குவிந்துகிடக்கும் பணத்தையும், மேலும் இலட்சக் கணக்கில் கொட்டித்தர, கொள்ளை இலாபக்காரரும் கள்ளமார்க்கட் அதிபரும் காத்துக்கிடக்கும் காட்சியையும், தமது வீரதீரம், அறிவு ஆற்றல், பக்தி யுக்தி பற்றி எல்லாம் புகழ்பாடிட, பத்திரிகைகள் பல பராக்குக்கூறிக் கிடப்பதையும் காணும்போது, அவர்களுக்கு ஏன் அந்த அளவுக்கு ஆணவம் பிறக்காது! அம்மி குழவியையே அப்பளமாக்கிவிட்டோம், இந்த இஞ்சி பச்சடிகள் எம்மாத்திரம் என்று எக்காளமிட்டு வருகிறார்கள்.

கொப்பம்பட்டியிலே தமது ‘குரலை’ உயர்த்திய ‘காமராஜர்’ ஒரு பத்து நாள் படபடவெனப் பேசிவிட்டு, அதன் பலனாக ஆயாசம் தவிரப் பிறிதொன்று காணாததால், சிறிதளவு அமைதி பெற்றார், வாய்மூடிக் கிடந்திடலானார். இப்போது, ‘மூவர்’ கிளம்பியுள்ளனர், முரசு அறைந்திட!

ஆஹா! தம்பி! இந்த ‘மூவர்’களின் பொருத்தம் இருக்கிறதே, சொல்லி முடியாது.

பெரியார், நாட்டுக்கு ஒவ்வோர் நாளும் எடுத்துச்சொல்லி வருவது தெரியுமல்லவா? காமராஜர் நல்லவர், நம்மவர், ஆனால் இந்தச் சுப்பிரமணியம் இருக்கிறாரே, ஆபத்தான ‘பேர்வழி’-ஆச்சாரியாரின் கையாள்—சமயம் பார்த்துக் குழி பறிப்பவர்—சந்தர்ப்பம் பார்த்துத் தட்சிணப்பிரதேசத் திட்டத்தைப் புகுத்திவிடக் காத்துக்கிடப்பவர்-என்பது