உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

வசனம் எழுதுபவன்; பிளேட்டோவுக்குப் பெயர் கிடைத்ததே, நீவிர் அவர் காலத்தில் இல்லாததால்; அரிஸ்டாடிலுக்கு அறிவாளி என்ற பெயரே, உம்மை மறந்ததால்—தந்தனர்—அது தெரியும் எமக்கு—எனவே, அவனைத் தள்ளிவிட்டு, தயவுசெய்து இதோ நாங்கள் கேட்கிறோமே, எங்கள் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருக்கும் பிரச்சினைகளை, இவைகளுக்கு, ஒளிவு மறைவு இன்றி, உள்ளத் தூய்மையுடன் பதிலளியுங்களேன் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.

மக்களைக் காணும்போதே இந்தச் சூழ்நிலை புரிந்துவிடுகிறது, மூவருக்கும் சுரீல் என்று கோபம் கிளம்புகிறது, கோபத்தைக் காட்ட வேறு வழி? நம்மீது காய்ந்து விழுகிறார்கள்.

மூவர் முரசு, சென்ற கிழமை மிக மும்மரமாக வேலை செய்தது—இம்முறையில்.

இதிலே, காமராஜர், இப்போது ஒரு புதிய கட்டிடத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறார். நான் இதனை எதிர்பார்த்தேன், ஆனால் இவ்வளவு விரைவில் நடைபெறும் என்று நினைக்கவில்லை.

இதுநாள் வரையில், அவர், தமது கோபப் பார்வையையும், அலட்சியமான கண்டனத்தையும், நம்மீது மட்டும்தான் செலுத்தி வந்தார். இப்போது, காலம் கனிந்துவிட்டது என்று எண்ணுகிறாரோ, என்னவோ, மெதுவாக பெரியார் மீதும், திராவிட கழகத்தின்மீதும் கூடத் தமது தீ நாவைச் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

காமராஜருக்கு, நமது கழகத்தின்மீது கசப்பும் கொதிப்பும் இருக்கக் காரணம் இருக்கிறது—சீச்சி! இந்தப் பழம் புளிக்கும்! என்று நரியே சொல்லிற்றாமே, (கதையில்) இந்த நாடாளும் நாயகர் சொல்லாமலா இருப்பார்! நாம், தனியாக எம்மிடம் ஒரு கட்சி இருக்கும், கொடி இருக்கும், ஆனால் உமக்குத்தான் அவ்வளவும் பயன்படும்—என்று கூறி ‘குத்தகைக்கு’ விடவில்லை, நமது கழகத்தை!!

கண்ணீரும் செந்நீரும் கொட்டி வளர்த்த இந்தக் கழகம், விசுவாமித்திரனிடம் ராஜ்யத்தைத் தானமாக்கிவிட்டு, சுடலைகாக்கச் சென்றானாமே அரிச்சந்திரன், அவ்விதம், காமராஜருக்குக் காணிக்கையாக்கிவிட்டு, அவருடைய திருவைப் பாராட்டும் பஜனை வேலையை மேற்கொள்ளும், துணிவு பெறவில்லை.