உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கடிதம்: 74

இயற்கை கொஞ்சுகிறது!
இல்லாமை கொட்டுகிறது!!

உழைப்பும் சிக்கனமும்—‘தினமணி’யின் விளக்கம்—தமிழ்நாட்டுத் தொழில் நிலை.

தம்பி!

கடந்த ஒரு திங்களாகத் தமிழகத்தில், மாமழை பொழிந்த வண்ணமிருப்பதனால், இப்போது எங்கு பார்த்தாலும், இயற்கை கொஞ்சுகிறது—ஏரி குளங்களில் எழில் வழிகிறது—வயல் வரப்புகளிலே வண்ணம் காணப்படுகிறது—மரம் செடி கொடிகள் யாவும் பசுமை பொழிகின்றன. பாங்கான காட்சி தெரிகிறது. வரண்டுகிடந்த இடங்கள், வெடித்துக்கிடந்த வயல்கள், தூர்ந்து கிடந்த வாவிகள் வாய்க்கால்கள் எல்லாம் புதுக்கோலம் காட்டி நிற்கின்றன. எங்கள் மாவட்டத்தில், பாலாறுகூட ‘கலகலென’ச் சிரித்துவிட்டது என்றால் பாரேன்!! பத்துப் பதினைந்து ஆண்டுகளாக, ஈரம் காணாது, இருந்த ஏரிகளெல்லாம் இன்று நிரம்பி வழிகின்றன. ‘வெறிச்சென்று’ இருந்துவந்த வெளிகள் பெருமழையால் வெள்ளக்காடாயின; மழை நின்றதும், சதுப்பாகி, இப்போது ஈரம் அழகளிக்கும் தோற்றம் தெரிகிறது. வரண்ட மனதினர் போன்றிருந்து வந்த குன்றுகளே இப்போது வளமளிக்கும் வகை பெற்ற நிலையில் இருக்கின்றன! அடவிகளின் நிலையைக் கூறவா வேண்டும்! நள்ளிரவில், நான் நண்பர்-