உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

என் கடமையைக் கனிவுடன் செய்துள்ளேன், காண்மின்! அதோ அருவி! இதோ ஏரி, குளம், மடுவு, வாய்க்கால்! எங்கும் பசுமை! வளம்பெறுவதற்கான வாய்ப்புகள்!! — என்று இயற்கை பெருமிதத்துடன் பேசுகிறது!!

ஆமாம், தம்பி, இயற்கை கொஞ்சுகிறது, எனினும், இல்லாமை கொட்டுகிறது! என் பயணங்களில் நான் இரண்டையும் காண்கிறேன்! எல்லோரும் இன்புற்று வாழ்வதற்குத் தேவையான அளவு செல்வம் செழித்திடத்தக்க சூழ்நிலையை இயற்கை அளிப்பதும் தெரிகிறது! மிகப் பெரும்பாலான மக்கள், இல்லாமையால் இடர்ப்படுவதும் தெரிகிறது!! இயற்கையின் மீது குற்றம் காண்பதற்கில்லை. நில நடுக்கமேற்பட்டு நாசம் விளைதல், நெருப்பைக் கக்கி நாசம் ஏவுதல் போன்றதேதுமில்லை! வெள்ளச் சேதம் சிற்சில இடங்களில் காண்கிறோம். அரசுக்கு ஆற்றல் இருந்தால் தடுத்து, சேதம் ஏற்படாது செய்திருக்க முடியும் என்பதும் தெரியத்தான் செய்கிறது.

இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது! காரணம் என்ன?

வயலிலே பசுமை தெரிகிறது, உழைப்பாளியின் உடலிலே பசைகாணோம்! இயற்கையின் அழகொளி எங்கும் தெரிகிறது! ஏழையின் கண்களோ இருண்டுதான் உள்ளன, ஒளி இல்லை!

இயற்கை வளமளிப்பதாக இருந்தும், இல்லாமை இந்நாட்டு மக்களிலே மிகப் பெரும்பாலோரைக் கொட்டுகின்ற இந்த நிலைக்குக் காரணம் யாது, இந்த நிலையினை மாற்றிட வழி என்ன, இந்த வழியினைக் கண்டறிந்து கடமையினைச் செய்து வெற்றிகாணும் பொறுப்பை ஏன் துரைத்தனம் ஏற்றுக்கொள்ளவில்லை, அங்ஙனம் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாத துரைத்தனத்தை, மக்கள் எங்ஙனம் அனுமதித்துள்ளனர், ஏன் சுமந்து கிடக்கின்றனர், என்ற இன்னபிற எண்ணங்கள் எழுந்த வண்ணம் இருக்கும், பயணத்தின் போதெல்லாம்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, சுற்றுப்புறங்களிலிருந்து, பத்து, இருபதுகல் தொலைவிலிருந்தெல்லாம், இளைஞர்கள், இருவர் மூவர் உந்து வண்டிகளில் வந்து குழுமிடக்கண்டு களித்ததுண்டு; இப்போது இலட்சிய ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மட்டுமல்ல, தம்பி, உழைத்து உழைத்து உருக்குலைந்து போயிருக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள், தாய்மார்கள் வருகிறார்கள்! கண்டதும் எனக்குக் கவலை குடைகிறது! ஆமாம், கவலைதான்! அவர்கள், உழைப்பின் பெருமையை உற்சாகத்துடன் பேசி வரும் தலைவர்களின்