உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

துரைத்தனத்தினால், என்ன கதிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது, கவலை குடையாமலிருக்க முடியுமா! கவனித்தாயா, தம்பி, இயற்கை கொஞ்சுகிறது, உழைப்பு நிரம்ப இருக்கிறது, இருந்தும், இல்லாமை கொட்டுகிறது!

மானும் மயிலும் மட்டுமல்ல, பாம்பும் புலியும் பிறவும் பெறுகின்ற வாழ்க்கை வாய்ப்புகள்கூட, இந்தக் கள்ளமில்லா உள்ளம் படைத்த மக்களுக்கு, துரைத்தனம் அளித்திட மறுக்கிறது. அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவே மறுக்கிறது.

பட்டினியும் பசியும், வேலையில்லாக் கொடுமையும் இருந்திடல், அறமல்ல, அந்த அவல நிலையைக்கண்டும் மாற்றிட முனையாத துரைத்தனம், நாகரிகமுள்ளதென்று எவரும் கூறார். இங்கோ இயற்கை அன்பு சொரிகிறது, மக்கள் வியர்வையைக் கொட்டுகிறார்கள். எல்லாம் பதவியில் உள்ளோருக்கும் அவருக்குப் பராக்குக்கூறி வாழ்ந்திடும் செல்வர்களுக்கும் குளித்திடப் பன்னீர் ஆகிறது; உழைத்தும் வாழ்வில் சுகம்காணா மக்கள், கண்ணீர் பொழிகின்றனர்; கண்ணீர்த்துளிக் கட்சி என்று நம்மைக் கேலி செய்வதாக எண்ணிக்கொண்டு சிலர் செப்புகின்றனரல்லவா, இந்த மக்கள், கண்ணீர்த்துளி கட்சி என்றால், அது நம்கட்சி, இனம் இனத்தோடு என்றபடி கண்ணீர் கண்ணீருடன் கலந்து உறவாடலே முறை என்று எண்ணிக்கொண்டனர்போலும்; பல்லாயிரக் கணக்கிலே கூடுகின்றனர்.

ஏத்தாபூர் என்றோர் சிற்றூரில் நான் பேசிக்கொண்டிருந்தேன்—நண்பர் N. V. நடராசன், சென்ற கிழமை முழுவதும், என்னைக் ‘கிட்டி’போட்டு வேலை வாங்குவது என்பார்களே, அதுபோல வேலை வாங்கினார்; செல்லுமிடமெல்லாம், தேர்தல் நிதி திரட்டு, நன்கொடைகள், மேலும் மேலும் கேட்டு வாங்கு, பொதுச்செயலாளர் ஐந்து இலட்சம் கேட்கிறார், நிதிதிரட்டு, உடனே, இங்கேயே, பணம் திரட்டிக்கொடு என்று ‘சிமிட்டா’ கொடுத்தபடி இருந்தார்; நான்கூட குடந்தைக் கூட்டத்தில் சொல்லியும் விட்டேன். N. V. நடராசன் என்பதற்குப் பொருள் என்ன தெரியுமா நண்பர்களே! நன்கொடை வாங்கும் நடராசன் என்பது பொருள்—என்று!

ஏத்தாபூர் கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்தபோது, கிராமத்து உழைப்பாளி ஒருவர்—முப்பது வயது இருக்கலாம்—அவர் மேனி உழைப்பால் கருத்து இருந்தது போலவே, அவர் கட்டியிருந்த ஆடை காலத்தால் கருப்பாகிக்