உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

கிடந்தது—மேடைக்கு வந்தார்—தேர்தல் நிதி என்றுகூறி, தொகையின் அளவு கூறாமல் பணம் கொடுத்தார்—தம்பி, ஒரு அணா!! ஆமாம்! அவ்வளவுதான் இருந்தது அந்த உத்தமனிடம். அதையேனும் கொடுத்தாக வேண்டும் என்ற கடமை உணர்ச்சி இருந்தது அந்தக் கண்ணியவானுக்கு. கனவான்களுக்கு உதிக்க முடியாத கடமை உணர்ச்சி அல்லவா அது! அந்த ஒரு அணாவை, நான் ஒரு இலட்சமாக மதித்து மகிழ்ந்தேன். உபசாரப்பேச்சு அல்ல! அந்த ஒரு அணாவை என்னிடம் கொடுக்கும்போது, நான் அந்த உழைப்பாளியின் முகத்தை நன்றாகக் கவனித்தேன்—இதயம் ஒரு அணுவாக வடிவெடுத்து வந்ததை உணர்ந்தேன். அன்று இரவு பசி நீக்கிக்கொள்ளப் பயன்பட்டிருக்கும், களைப்புப் போக்க தேனீர் அருந்தப் பயன்பட்டிருக்கும், ஆனால் அந்தக் கண்ணியமிக்கவன், நாடு மீளவும் கேடு மாளவும் நான் என்னாலான காணிக்கையை இதோ செலுத்துகிறேன் என்ற எண்ணத்துடன் தருகிறான் ஒரு அணா!

இத்தகைய நல்ல மனம் படைத்தோரெல்லாம், இயற்கை கொஞ்சுகிறது, உழைப்பு நிரம்ப தரப்படுகிறது என்ற நிலை இருந்தும், இல்லாமையால் கொட்டப்படுகிறார்கள்.

இவர்களை ஆளும் காங்கிரஸ் கட்சியினரோ, ஏழைகளை ஈடேற்ற, அவர்களுக்குத் தொழில் தந்து துயர்துடைக்க, ஏற்கனவே இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிட்டுவிட்டார்கள், இன்னும் ஒரு ஆறு ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப் போகிறார்கள்!!

உழைத்து உருமாறிக் கிடக்கும் உத்தமர்களே! உங்களுக்கு உள்ள தரித்திரத்தைப் போக்க, துரைத்தனத்தார் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். அறிவீரா? என்று நான் பொதுக்கூட்டங்களில் எடுத்துச்சொல்லிவிட்டு, இவர்களின் முகத்தைப் பார்க்கிறேன்—திகைத்துப் போகிறார்கள் இந்த மக்கள். இரண்டாயிரம் கோடியா! எமக்காகவா! ஏற்கனவே செலவிட்டாகிவிட்டதா? நிஜமாகவா? ஏனய்யா இப்படிக் கேலி செய்கிறீர்! வெந்த புண்ணிலே வெந்தழலைப் போடுகிறீர்! பகல் பட்டினி இராப் பட்டினி என்ற நிலையில் இங்கு நாங்கள் அவதிப்படுகிறோம், எங்களிடம் வந்து இரண்டாயிரம் கோடி ரூபாய் எமக்காகச் செலவிட்டாகிவிட்டதென்று சொல்கிறீர்களே என்று, கேட்பது போலிருக்கிறது அவர்கள் பார்வை!

இந்த இலட்சணத்தில் துரைத்தனத்தை நடத்தும் கட்சியினர் கல்கத்தாவில் கமிட்டி நடத்தி, மக்களுக்குப் புத்திமதி