159
கூறுகின்றனர்! என்ன அறிவுரை அளித்துள்ளனர் அறிவாயோ, தம்பி, கேள்! கேட்டால், கைகொட்டிச் சிரிக்கத் தோன்றும்.
சிக்கனமாக வாழவேண்டும்
செலவைக் குறைத்துக்கொள்ளவேண்டும்இதுதான், கல்கத்தாவில் சமதர்மச் சீமான்கள் கூடிக் கலந்து பேசித் தயாரித்த புத்திமதி.
வயிறாரச் சோறின்றி, மானமார ஆடையின்றி, குடியிருக்கக் குச்சிலின்றி, நோய் தீர மருந்தின்றி இருக்கிறார்களே இவர்களைப் பார்த்துத்தான் காங்கிரஸ் தலைவர்கள் சிக்கனம் என்ற அறிவுரை கூறுகிறார்கள். மிக மிக நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும் இதற்கு! இருக்கிறது, இத்தகைய நெஞ்சழுத்தம், சீமான்களுக்கு!
“எப்போதும், உனக்கு இந்தப் பஞ்சப்பாட்டுதான்! சாமி! சாமி! பணம்! பணம்! பணம்! செச்சேச்சே! இப்படியாடா, உயிரை வாங்குவது. கையைப்பிடிப்பது, காலைப்பிடிப்பது, பணத்தை எப்படியாவது, கெஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக்கொள்வது; பிறகு கண்ணை மூடிக்கொண்டு, வீண்செலவு செய்வது இதே உனக்கு வழக்கமாகிவிட்டது.” என்று எலும்பு உடையப் பாடுபடும் ஏழை உழவனுக்கு இதோபதேசம் செய்துகொண்டே, வெற்றிலைச் சாறைக் காரித்துப்புகிறாரே, வடபாதி மங்கலத்தார், குன்னியூரார், கோட்டையூரார், கொடிக்காலுடையார், அந்தச் சாற்றிலே, குங்குமப்பூவும் கிராம்பும், ஏலக்காயும் சாதிக்காய் ஜாபத்திரியும், இருக்கிறது, தம்பி! புளித்துப்போன கஞ்சிக்கு, உறைப்புக் குறைந்துபோன மிளகாய்த் துண்டைத் தேடித் தவிக்கும் உழைப்பாளிக்கு, வீண்செலவு செய்யாதே என்று புத்தி கூறுகிறார்கள். கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டியில், இதே உபதேசம் தரப்பட்டது.
தினமணிக்கே பொறுக்கவில்லை. எவ்வளவு எரிச்சல் ஏற்பட்டிருந்தால், ஆளவந்தார்களின் இருமல் உறுமலைக்கூட இன்னிசை என்று கூறி, கூடச் சேர்ந்து தாளம் தட்டும் தினமணிக்கே கோபம் ஏற்பட்டு, வீண்செலவு செய்யாதீர் என்று ஊராருக்கு உபதேசம் செய்வது இருக்கட்டுமய்யா ஊராள்வோரே! முதலில் உங்கள் ஊதாரித்தனத்தைச் சற்றுக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும், என்பதை எண்ணிப்பார், தம்பி.