உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

“பொதுமக்களுக்கு உபதேசம் செய்யும் அநாவசியச் செலவுத் தவிர்ப்பையும் சிக்கனத்தையும், மத்திய சர்க்காரும் ராஜ்ய சர்க்கார்களும் முதலில் தாமே பின்பற்றி பிறருக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டும்”

தினமணியின் திருவாசகத்தில் ஒரு துளி இது!

என்ன பொருள் கிடைக்கிறது இதிலிருந்து? ஊதாரித்தனமாகச் செலவிடுகிறது சர்க்கார் என்ற உண்மை. எப்படிப்பட்ட சர்க்கார் இப்படிப்பட்ட ஊதாரித்தனமாக நடந்து கொள்கிறது? எம்மை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் இல்லை. எமக்கு நிகர் யாமே!—என்று தம்பட்டமடிக்கும் கட்சியினர். உலகத்திலேயே உத்தமர் என்று பெயரெடுத்த காந்தியாரால், மாணிக்கங்களாக்கப்பட்ட மண்ணாங்கட்டிகளெல்லாம், தம்மை இயற்கைமாமணிகள் என்று கூறிக்கொள்கின்றன! அவர்தம் ஆட்சியிலே நடைபெறும் ஊதாரித்தனம், தினமணிக்கே பிடிக்கவில்லை; குமட்டலெடுக்கிறது!!

தினமணிக்கு ஏதோ கோபம், அதனால்தான் ‘எதிர்க்கட்சி’ பேசுகிறது, என்று எவரும் எண்ணிவிடக்கூடாது என்பதற்காக, மேலும் விளக்கம் அளிக்கிறது, அந்த ஏடு.

“சர்க்கார்களின் முயற்சிகளில் வீண்செலவு அம்சம் ஒரு அளவு இருக்கிறது என்பது உலகமறிந்த விஷயம். தணிக்கைக் கமிட்டிகள் இவற்றை ஒருவாறு புலப்படுத்தியுள்ளன. இவற்றிற்குமேலாக தண்டச் செலவுகளும் இருக்கக்கூடும். ஏராளமான அதிகாரிகளும், கமிட்டிகளும், கோஷ்டிகளும், ஜமாக்களும், ஆலோசனைகளும், அதிகாரிகளின் மகாநாடுகளும், நடந்துகொண்டே இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அடிபட்டுப் போகவேண்டும். இதில் ஏற்படும் வீண்செலவும் வேலை நஷ்டமும் கொஞ்சநஞ்சமல்ல.”

தம்பி! இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது! இந்த நிலைமைக்குக் காரணமாக உள்ளவர்கள், ‘ஜமாக்கள்’ அமைத்துக்கொண்டு தண்டச்செலவு செய்துகொண்டு இருக்கிறார்கள். இது உலகறிந்த விஷயம் என்று தினமணி கூறுகிறது.

ஒவ்வொரு முறை தணிக்கைக் கமிட்டி தன் கருத்துரையை வழங்கும்போதும், நடைபெற்ற ஊழல்களை இடித்துக்காட்டுகிறது! எனினும், தண்டச் செலவும், தர்பார் போக்கும் துளியும் குறைவது கிடையாது. எதற்கு எடுத்தாலும் ஒரு கமிட்டி! எந்த விஷயத்தைப் பற்றிப் பரிசீலிக்கவும் ஒரு ‘ஜமா’—ஒவ்வொன்றுக்கும் படிச்செலவு! ஒன்றை ஒன்று