162
நிருபர்களை அனுப்புவதும், படம்போட்டுப் பாராட்டுவதும் கொஞ்சமா! இப்போது, நாற்றம்தாளமுடியாததாகிவிட்டதால், இந்தத் தண்டச் செலவுகள் ஏன் என்று கேட்டுத்தீரவேண்டி வந்தது இந்த ஏட்டுக்குக்கூட!
என்று ‘இரத்தினச் சுருக்கமாக’ இன்றைய ஆட்சிமுறையின் யோக்யதையைத் தினமணி அம்பலப்படுத்துகிறது.
இன்றுள்ள ஆட்சிமட்டும் காங்கிரஸ் கட்சியுடையதாக இல்லாமலிருந்தால், தினமணியின் எழுத்திலே தீப்பொறி காண்போமே!
ஜஸ்டிஸ் கட்சிக் காலமாக இருந்தால், என்னென்ன எழுதத் தோன்றும், இந்தத் தேசீய ஏடுகளுக்கு!
ஏழை அழுகிறான்; அவனைக் கொள்ளை அடித்துக் கொட்டமடிக்கிறார்கள்.
கமிட்டி கமிட்டி என்று அமைத்துக்கொண்டு, ஏழையின் பணத்தைப் பகற்கொள்ளை அடிக்கிறார்கள்.
திறப்பு விழாவாம்! மூடு விழாவாம்! இதற்கு பணம், கொள்ளை போகிறது!
இந்தத் ‘தூங்குமூஞ்சிகளை’ யார் காண விரும்புகிறார்கள்! எதற்காக இதுகள் விழா நடத்த வரவேண்டும்!
நாலணா செலவுக்கு நாலு ரூபாய் எடுத்துக்கொண்டு, கொழுத்துவிட்டார்கள்!என்று காரசாரமாக, நடையை நாராசமாக்கி எழுதுவர்! இப்போது தமது சொந்தக்கட்சியே இத்தகைய கேவலமான நடத்தையில் ஈடுபடுவதால், தினமணியால், இப்படியும் அப்படியுமாகத்தான் இடித்துக்காட்ட முடிகிறது. ஆனால், உண்மையை ஊரார் அறிந்து கொள்வதற்கு இவ்வளவே போதும். இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது. அதற்கான காரணத்தில் ஒன்று ஊராளும் பொறுப்பும் வாய்ப்பும் ஒரு ஊதாரிக் கூட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பது. இதனை உணர்ந்துகொள்ள, தினமணியின் கண்டனம் போதுமானதுதான்.