உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169

அவ்வப்பொழுது அனந்தராமகிருஷ்ணன் எனும் தொழிலதிபர், பேசிடக் கேட்கிறோமல்லவா?

அமைச்சர்களேகூடச் சிலவேளைகளில், பேசிவிடுகின்றனர்—பிறகு அஞ்சி ஆமையாகிவிடுகிறார்கள்.

குமாரசாமி ராஜா அவர்கள் குமுறிய உள்ளத்தோடு பேசத் தலைப்பட்டதை, நாடு எங்ஙனம் மறந்துவிடும்! எல்லாம் மத்திய சர்க்காரில் என்று இருக்கும் நிலைமையை எதிர்த்துப் போரிடவேண்டிய காலம் விரைவில் வரும் என்றல்லவா கூறினார்.

தமிழகம், அவர் இந்தத் துறையில் முனைந்து நிற்பாரானால், வாழ்த்தி வரவேற்றிருக்கும், வணங்கி அவர் தலைமையைப் பெற்றிருக்கும்.

கோவையில் கொதித்தெழுந்தவர், பிறகு ஏனோ மெளனமாகிவிட்டார். காலம் கனியவில்லை என்று கருதுகிறாரோ—என்னவோ!

எனினும் அவரவருக்கு முக்கியமானது—உயிர்ப் பிரச்சினை என்று கருதத்தக்க கட்டம் கிளம்பும்போது, அவர்களெல்லாம், டில்லியின் ஆதிக்கம் ஆகாது, கூடாது, பெருந்தீது! என்று பேசுவது காண்கிறோம்.

இவர்களெல்லாம் தொடர்ந்து இந்தக் கருத்தை நாட்டிலே எடுத்துரைத்து, மக்களைப் பக்குவப்படுத்தலாகாதா என்று ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறோம். பிறகோ அவர்கள், வாய்மூடிடக் கண்டு வாடுகிறோம்; சரி, சரி, இன்னும் இவர்களே பக்குவப்படவில்லை என்றெண்ணிக்கொண்டு, நாம் நமது பணியினைத் தொடர்ந்து செய்து வருகிறோம். ஒரு அணா கொடுத்தானே, உழைப்பாளி, அவன் இதை அறிவான்!! நம்மிடமிருந்து தொடர்ந்து இந்தப் பணியை எதிர்பார்க்கிறான். சோர்வடையாதீர்கள்! என்னால் ஆன உதவியை நான் அளிப்பேன் என்று சொல்லால் அல்ல, செயலால் காட்டுகிறார்கள், இத்தகைய செம்மல்கள். அவர்களை அமைச்சர்கள் அறிவதில்லை.

இந்தியாவிலிருந்து கலைத் தூதுக் குழுவினர் பலர் பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர்...மக்கள் போற்றி மகிழும் கலைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து தூதுக்குழுவுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப்படவில்லை. ஊர்பேர் தெரியாத யாரோ ஒரு சிலர் தமிழ் நாட்டின் கலைஞராகப் போய்வருகிறார்-

அ.க. 4—11