170
கள். காரணம் என்ன? மக்களின் மனதை அறிந்து நடக்கும் ஆட்சி இல்லை. மத்திய அரசியலார், பாராளுமன்றத்தில் ஒரு சிலரைமட்டும் நம்புகிறார்கள். அவர்கள் மனம்போல் எல்லாம் நடக்கிறது. மத்திய அரசியலாரின் போக்கை மாற்றவோ திருத்தவோ இங்குள்ள அரசியலார் முன்வருவதில்லை! அச்சம் தடுக்கிறது.
தம்பி! பிரச்சினை, கலைத்துறை பற்றியது—எனினும் என்ன—எந்தத் துறையில் அநீதி காணப்பட்டாலும் அதனைக் கண்டித்துக் களைந்து எறியத்தானே வேண்டும்.
மத்திய அரசியலாரின் போக்கைக் கண்டிக்கிறார்—இதனை மாற்றாது இருக்கும் இங்குள்ள நமது பேர் அரசையும் கண்டிக்கிறார்.
அச்சம் தடுக்கிறது இவர்களை என்றார்.
பயந்தாங்கொள்ளிகள்—தொடை நடுக்கம் கொண்டோர்—கோழைகள்—என்றெல்லாம் அந்த அச்சம் என்பதற்குப் பல பொருளைப் பெறலாம். அச்சம் தடுக்கிறது! என்ன அச்சம்! அதுதான் தம்பி, ஷேக் அப்துல்லா பற்றிச் சொன்னேனே, அந்த அச்சம்தான். பதவியும் பவிசும் போய்விடுமே என்ற அச்சம் — வேறென்ன? போனால் என்ன? மானமன்றோ பெரிது! நாடல்லவா பெரிது! என்று ஒரு அணா கொடுப்போன் கேட்பான்—ஆமாம்—அவனிடம் அணாக்கள் தானே உள்ளன. பதவியில் உள்ளவர்கள், மானத்தை இழந்து விட்டாலும், இலட்சாதிபதியாகிறார்களே—அதிலே அவர்களுக்குத் திருப்தி—பெருமை—பாசம்! ஆசை ஊட்டவும் அச்ச மூட்டவும், டில்லிக்கு முடிகிறது.
டில்லிக்கு இந்த நிலை இருக்கும் வரையில், இங்கு அரசுக் கட்டிலில் அமருவோர் அடங்கி ஒடுங்கி ‘அடைப்பம்’ தாங்குமட்டும் கொலுவிருக்கலாம். ஏனென்று கேட்கத் துணிந்தால், ஷேக் அப்துல்லாவாக வேண்டும். இந்த அச்சம் தடுக்கிறது!
எனவேதான் தம்பி, ஆட்டிப்படைக்கும் டில்லியின் பிடியில் திராவிடம் சிக்கிக் கிடக்கும் நிலைமை ஒழிந்தாக வேண்டும் என்று நாம், கூறுகிறோம்.
தமிழ்நாட்டு மக்களின் பலவகைக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. எல்லைப் பிரச்சினையைத் தமிழ்மக்கள் முன் ஒரு முறை எழுப்பியபோது, “கேட்கத் துணிந்துவிட்டீர்களா? கேட்டால் உள்ளதும் போய்விடும்”