171
என்று செங்கோட்டையை எடுத்துப் பிறருக்குத் தந்தனர். மீண்டும் ஒருமுறை கேட்டபோது “அப்படியா? இன்னும் உங்கள் துணிவு போகவில்லையா? தமிழ்நாடு என்று நாடும் இல்லாமல் செய்துவிடுவோம். தட்சிணப்பிரதேசம் என்று உங்களில் சிலரைக் கொண்டே மாற்றியமைத்துவிடுவோம். எங்களால் முடியும், தெரியுமா?” என்ற மிரட்டலே கிடைத்தது. அமைதியான கிளர்ச்சி ஒன்று நடந்தபோது “இவ்வளவா, தமிழ்நாடு என்ற பெயரும் கிடையாது, போ” என்று விரட்டலே கிடைத்தது.
தெளிவாக, நிலைமை விளக்கப்பட்டிருக்கிறதே, படம் பிடித்துக் காட்டுவது போலிருக்கிறதே, யார் இப்படி விளக்கமாகத் தந்திருப்பவர்—என்று கேட்கத் துடிக்கிறாய் அல்லவா?
தம்பி, மிரட்டல், விரட்டல், என்று கூறியிருப்பது கேட்டு ஆட்சியாளர்கள் மனம் ‘சுருக்’கெனத்தான் தைக்கும். ஆனால், நிலைமை இதுதான். அச்சத்தால், இங்குள்ள அமைச்சர்கள் காலமெலாம் வாயடைத்துத்தான் கிடக்கின்றனர்—எப்போதோ ஓர் சமயமாகிலும், பொதுமக்கள் பொங்கி எழுவது கண்ட பீதியால், எதிர்க்கட்சிகளின் ஏளனம் குத்துவதால், ஓரோர் சமயம் உள்ளமே சுடுவதால் துடித்து எழுந்து, நீதி கேட்கின்றனர். அப்போது டில்லியிடமிருந்து அவர்கட்குக் கிடைப்பது என்ன? மிரட்டல்—விரட்டல்!
ஆமாம், டில்லியின் போக்கையும் இங்குள்ள நம் அமைச்சர்களின் நிலையையும் அழகுபட எடுத்துரைத்துள்ள இவர் யார், என்றுதானே கேட்கிறாய்.
தம்பி, இவர் நமது கழகம் அல்ல. எந்தக் கழகத்தினரும் அல்ல, அரசியல்வாதியே அல்ல.
அப்படியா? அப்படியானால்...யார்......என்று கேட்கிறாய், தெரிகிறது...கேட்டுப்பார், நண்பர்களை, இப்படி, டில்லி—சென்னை நிலைமைகளைப் படம் பிடித்துக் காட்டுபவர், யார் என்று; நீயே கூடத்தான் கண்டுபிடியேன் பார்க்கலாம். அடுத்த கிழமை நான் அவரை உனக்குக் காட்டுகிறேன்.
18—11—’56
அன்பன்,
அண்ணாதுரை