உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

அவரிடம் பகை கொள்ளச் சொல்கிறேன் இல்லை! அவர்கள் அன்புடன் உன்னை அழைத்திடும்போது, அருவருப்பு அடைந்து வெறுத்து ஒதுக்கிவிடு என்று பேசினேன் இல்லை! ஆயிரம் கனிவு காட்டலாம் அம்மையே! எனினும் இதோ என் அன்னை! என்று பெருமையுடன் என்னைச் சுட்டிக்காட்டிடவா நீ தயக்கமடையவேண்டும்! மதியற்றவனே! நேசம் வேறு, தாய்ப்பாசம் என்பது வேறு! கன்னல் மொழி பேசக்கூடும் மற்றவர்—உன் தாய் சிலவேளைகளிலே கடிந்துரைக்கக் கூடச் செய்வாள்—எனினும் ‘தாய் அன்பு’ என்பது தனியானதல்லவா—பிற எங்கும் பெறமுடியாததோர் பேரன்பு அல்லவா! பெற்றமனம் கொண்டிடும் பாசத்தை வேறு எங்கு காண இயலும்! இதனையுமா கற்பிக்கவேண்டும்? கடுவனிடமும் கொல்லும் புலியிடமும்கூடக் காண்கிறோமே இதனை. கருத்தற்றவனே! உன்னிடம் அகமும் புறமும் அளித்து, அணி ஆரமும் மேகலையும் தந்து, அறநெறியும் பிற பெருமைகளையும் தந்து, அழகியதாய் விழுமியதாய் உன் வாழ்வு அமைவதற்கான வாய்ப்புகளைத் தேடித்தேடித் தந்து, நீ ஏற்றம் பெற்று, கொற்றம் நடாத்தி, ஏறுநடை போட்டு, எங்கணும் சென்று, என் வீரமும் அறிவும் எனக்கு என் அன்னை அளித்தாள்! என்று கூறி எனக்குப் பெருமை தேடித் தருவாய் என்று பார்த்தால், பெற்றவளை மறந்திடத் துணியும் பேதையே! கற்றதை மறந்திடும் கசடனே! என்னை மகனாக்கிக்கொள்ள ஒரு மகராசி, அழைக்கிறாள்—அவள் தன் வயிற்றில் பிறக்காதவர்களாயினும் வாஞ்சனை காட்டுவதாக வாக்களிக்கிறாள்—உச்சி மோந்து முத்தமிட்டு, உன் தாயாக நான் இருக்கிறேன்! உனக்கும் உன்போலப் பல பிள்ளைகட்கும் நான், தாய்வேலை பார்க்கும் பேராவல் சுரந்திடும் உள்ளம் கொண்டேன், எனவே உத்தமனே! உன் தாய் என்று அவளையும் இவளையும் காட்டி அழாதே! நான் தாயானேன், நீ என் மகனானாய் என்று அழைக்கிறாள், நான் இனி அந்த அம்மைக்கு மகனாகிவிடுகிறேன், தாயே! விடைகொடு! என்று துணிந்து என்னைக் கேட்கிறாயே! பெற்ற வயிறு பற்றி எரிகிறதே! அந்த வேளையிலும், உன்னைப் பாவி! பழிகாரா! படுநாசமடைவாய்! என்று கூறவும் மனம் கூசுகிறதடா, பாலகனே! என்னைப்பார்! என் தாய்! என்று நீ கூறிப்பெருமைப்படத்தக்க நிலையில் நான் இல்லையா?...என்னிடம் என்னடா மகனே! குற்றம் கண்டாய்? என்னை வெறுத்துவிட்டு வேறோர் வேற்றுச் சீமையாளிடம் ‘தத்து’ போகவேண்டிய நிலையா வந்துற்றது? நான் என்ன நீ பசியால் துடித்து, பதறிக் கதறிடும்போது உன் முகத்தையும் பார்த்திடாமல், என் சுகத்தைக் கவனித்துக்கொண்ட மாபாவியா? உன்னை மாடாய் உழைக்கச் செய்து, நான் உலவி மகிழ ஒரு மாடி கட்டிக்கொண்டேனா! உழைப்பால் நீ ஓடானா-