179
பலரும் எதிர்பார்க்கிறபடியும், பொதுத் தேர்தலிலே நமக்குச் சிறப்பான வெற்றி கிடைத்து, நாம் ஆட்சி மன்றத்திலேயும் அமர்ந்து, நமது உரிமை முழக்கத்தை நடத்தினால் ஏ! அப்பா! இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஏடுகள் என்ன பாடுபடுமோ என்று எண்ணும்போதே எனக்குச் சிரிப்பு வருகிறது. இந்த அரியவாய்ப்புக்காக நாம் அரும்பாடுபடும்போது, 150 ரூபாய்க்காக இதுகள் ஆலாய்ப் பறக்கின்றன, என்று நம்மவர்களிலேயே சிலர் கூறுவது கேட்கும்போது, நெடுந்தொலைவிலிருக்கிற இந்துஸ்தான் டைம்சுக்கும் புரிகிறதே, இவர்களுக்கு ஏனோ வயிறு எரிகிறது என்றெண்ணி ஆயாசமடைகிறேன்.
நாங்கள் எவ்வளவு அரும்பாடுபட்டு, சில வேளைகளில் கனிவு காட்டி மகிழச்செய்கிறோம், மற்றும் சில வேளைகளில் உருட்டுவழி காட்டி மருளச் செய்கிறோம், எனினும் எல்லாம் எதன் பொருட்டு? நாம் ஒன்றாக வாழலாம், ஒரே நாடாக இருக்கலாம், ஓரரசுக்குள் இருந்திடலாம், தனித்தனி நாடுகள் தனித்தனி அரசுகள், வேண்டாம், கவி பாடியும் கதை கூறியும் நாங்கள் இதனைத்தானே எடுத்துக் கூறுகிறோம் ஒற்றுமைக்காக ஓயாது உழைக்கிறோம், ஏன் உமக்கு மட்டும் இந்த உயர்ந்த நோக்கம் ஏற்படவில்லை, எதனாலே உமக்குமட்டும், பேதபுத்தி, பிளவு மனப்பான்மை ஏற்படுகிறது, கங்கைக் கரைக்கும் காவிரிக் கரைக்கும் பேதம் ஏன் காணவேண்டும்? காசி காஞ்சி என்று ஏன் பிரித்துப் பிரித்துப் பேசுகிறீர்கள்? எல்லாம் பாரதநாடு என்று பரிவுடன் எண்ணிடலாகாதா? என்று தலைவர்கள் பேசத்தான் செய்கிறார்கள்—கேட்கும்போது சிற்சில வேளைகளிலே எனக்குக்கூடத் தம்பி! நாம்தான் ஒருவேளை தவறாக நடந்துகொள்கிறோமோ, வீணான பேதபுத்தி நம்மைப் பிடித்தாட்டுகிறதோ, ஒற்றுமையின் மேன்மையை, ஓரரசின் உன்னதத் தன்மையை, ஒரு பெரும் நாடு என்ற திட்டத்தின் அருமை பெருமையை அறிந்து போற்றிடும் அறிவற்றுப் போனோமோ, என்றெல்லாம் தோன்றச் செய்கிறது. எனினும் மறுகணம், நம் நாட்டின் இயல்பும் அதற்கேற்ப வளர்ந்துள்ள வரலாறும், அதன் பயனாக நாம் பெற்ற பெருமைகளும் வந்து நிற்கின்றன. “ஏடா! மூடா! என்னை மறந்திட, துறந்திடத்தக்க நிலையிலா உன் மூதாதையர் காலமுதற்கொண்டு உன் காலம் வரையிலே நான் வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறேன்—இயற்கை எழிலும் வளமும் ஈந்த என்னை, உன் அன்னை என்று ஏற்றுக் கொள்ளவுமா உனக்குக் கூச்சம் ஏற்படுகிறது! உனக்கென்று ஓர் தனி இயல்பும், தனிவாழ்வு முறையும், கிடைத்திட அல்லவா, பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்தேன்! புன்னகை பூத்து நிற்கும் பூவையரெல்லாம் தாய் ஆவரோ?