உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185

உன் அன்பும் அக்கறையும், ஆங்கில ஏடு பொறுத்த வரையில், நான் மகிழத்தக்க வகையில் இன்னும் உருவெடுக்கவில்லை என்பதைக் கூறிக்கொள்ள வருந்துகிறேன். எனினும் சொல்லிவைக்கிறேன், நிலைமையை அறிந்து விரைவினில் ஆதரவு திரட்டி அளித்திடும் ஆற்றல் உன்னிடம் நிரம்ப இருக்கிறது என்று அறிந்தவன் என்பதனால்.

இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பல, வளமான ஆங்கில ஏடுகளை மட்டுமே வெளி உலகு காண்கிறது. எனவே திராவிடம் தெரிவதில்லை.

டாக்டர். மு. வ. கூறுவதுபோல, சென்னை அமைச்சர்களையோ அச்சம் தடுக்கிறது; எப்போதேனும் அவர்கள் துணிந்து நீதி வழங்கும்படி கேட்டாலோ, மிரட்டலும் விரட்டலுமே கிடைக்கிறது. பல்கலைக்கழகத்தினரின் நியாயமான கோரிக்கையையும் டில்லி புறக்கணித்து விடுகிறது, மதிப்பளிக்க மறுக்கிறது. இப்படி ஒவ்வோர் முனையிலிருந்தும் டில்லியின் தாக்குதல் கிளம்புவது கண்டு, மனம் நொந்து போயுள்ள நம்மையோ நாட்டிலே நடமாடவிடுவதே கூடாது, ஒழித்துக்கட்டவேண்டும் என்று டில்லியிலுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. இந்நிலையில், நமது கழகத்தைப் பிறர் அறிவதற்காகவாவது ஒரு ஆங்கில ஏடு—கிழமை இதழாவது வேண்டும் அல்லவா!

இதை அறிந்துள்ள உனக்கு ஆதரவு திரட்டி உடனே அனுப்பி வைக்கும்படி, தம்பி, நான் பன்னிப் பன்னிக் கூறத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.

கலை, கல்வி, அரசியல், எனும் மூன்று துறைகளிலே, டில்லி வழங்கியுள்ள மிரட்டல் விரட்டல் கண்டோம்—இனித் தம்பி, தொழில் துறையிலிருந்து கிளம்பும் ஒரு துயரக் கீதம், கேள். அதைக் கூறு முன்பு, நமது நிதி அமைச்சர் உருவத்தையும் உரையையும் நினைவிலே கொண்டுவந்து நிறுத்திக்கொள்ள வேண்டுகிறேன்!! அடுத்த கிழமை அந்தத் துயர கீதம் பற்றிக் கூறுகிறேன்.


25—11—’56

அன்பன்,
அண்ணாதுரை


அ.க. 4 — 12