82
கொண்டு குத்திவிட்டீர்கள் — குருதிகொட்டி அந்த வீரன் பிணமானான், இதோ நாங்கள் பல்லாயிரவர், இரத்தக் கண்ணீர் வடித்துக்கொண்டு நடைப்பிணமாகிவிட்டோமே—உமக்கு நாங்கள் இழைத்த கொடுமைதான் என்ன? ஏன்தான் இத்தகைய பயங்கரப் படுகொலை செய்தீர்கள்? சட்டமே! கேள்! சமூகமே! நீதிக்காக வாதாடு! நீதியே, உன் நீண்ட கரத்துக்கு வேலை கொடு! படுகொலை செய்த பாதகர்களைப் பாருக்குக் காட்டு. காரி உமிழட்டும் கற்றறிந்தோர்; சட்டம் அதன் சக்தியைக் காட்டட்டும்.
ஈடு செய்யமுடியுமா இந்தப் பெரும் இழப்பை — ஏது? ஏது?
எம்மிடம் பேச்சாளரும் எழுத்தாளரும் நிரம்ப இருக்கிறார்கள் — நடிகர்கட்குக் குறைவில்லை - நல்லோருக்குக் குறைவில்லை—வல்லோருக்கும் குறைவில்லை – ஆனால் நமது சாமி, நல்லவர், வல்லவர், எனும் இரு அருங்குணமும் ஒருருவாய் அமைந்து, பேசுவோருக்கும் எழுதுவோருக்கும் பெருந்துணையாய், பேசப்படத்தக்க பெரும்பொருளாக அல்லவா விளங்கிவந்தார் — அவரல்லவா அனியாயமாக வெட்டி வீழ்த்தப்பட்டார். செயல்முறையிலே ஓர் நாட்டம், செயல் படுவதிலே ஓர் தனி ஆர்வம், செயலில் ஓர் எழுச்சி—இவையாவும் ஒருங்கு அமைந்த ஓர் படைத்தளபதி அல்லவா நம் சாமி! கட்டளையிட்டுவிட்டுக் கண்ணயர்பவரா, உத்தரவு பிறப்பித்துவிட்டு உறங்கச் செல்பவரா, அல்லவே; படை அமைத்து, படை வரிசையை நடத்திச் சென்று, பணியாற்றி வெற்றிகாணும், வீரம் செறிந்த தலைவராக அல்லவா விளங்கிவந்தார்.
நரை முளைக்காப் பருவம் — நாற்பதுக்குச் செல்லவே இன்னும் எட்டாண்டு செல்லவேண்டும் — போய்விட்டானே அந்த வாலிப வேந்தன் — எப்படித் தாங்கிக் கொள்வோம்!
அழுகிறேன், அழுகிறீர்கள், அழுகிறோம் — நம்மை அழவைத்துவிட்ட அக்ரமக்காரர்கள் எங்கோ இருந்துகொண்டு சிரிக்கிறார்கள். பெருமைப்பட்டுக்கொண்டிருந்தீர்களே, எங்கள் சாமி, எங்கள் சாமி என்று. மார்தட்டித் தட்டிப் பேசினீர்களே, எங்கள் சாமி!, எங்கள் சாமி! என்று எங்கே உங்கள் சாமி? என்று கேட்கின்றனர்; ஐய்யயோ? என்ன பதில் சொல்லுவோம். வேதனையால் தாக்கப்படுகிறோம்; படுபாவிகளா! எங்கள் சாமியைப் படுகொலை செய்துவிட்டீர்கள், பாதகம் புரிந்துவிட்டீர்கள், பண்பற்றவர்களே! எங்கள் சாமியின் உடலைத்தான் வெட்டி எறிந்தீர்கள், அவர் உள்ளம் எங்களோடு இருக்கிறது, வேறெங்கும் செல்லவில்லை, அது அழிந்துபடவில்லை, எங்களாடு இருக்கிறது, எங்களுள் இருக்கிறது,