129
பெற்றவர்களாக இருக்கவே மாட்டார்கள். இசைவாணர்களின் இல்லத்தின் அளவிலிருந்து அவர்கள் பூசிக்கொள்ளும் கலவை விலை வரையில் தகவல் தருவார்கள்; பல்லவிக்கும் அனுபல்லவிக்கும் உள்ள தொடர்புகூடத் தெரிந்திருக்காது. மூன்றடுக்கு மாடிவீடு எவ்வளவு சிக்கனமாகக் கட்டி முடிக்கமுடியும் என்ற திட்டம் தருவார்கள்; தாம் இருக்கும் வீட்டிலே கூரையில் ஒழுக்கல் இருக்கும்.
தம்பி! இப்படிப்பட்டவர்கள், நிரம்ப இருக்கிறார்கள்!
இவர்கள், பல தகவல்களை நினைவிலே வைத்துக்கொள்வர்; கேட்பவர்களை மலைக்கச்செய்ய; வேறு கவைக்குதவும் விதமாக அல்ல.
நான், குறிப்பிட்ட ‘நினைவு’, இவை போன்றது அல்ல.
ஆய்ந்தறிந்துகொண்ட நினைவுகள்!
அந்த நினைவுகளேகூடச் சில வேளைகளிலே, கலைந்தும் குலைந்தும் போகின்றன; சிதைந்தும் சிதறியும் போய்விடுகின்றன என்றால், ‘கனவு’, கண்டது கண்டபடியேவா, நினைவிற்கு வரும்? வாராது! ஆனால், கனவுகள் கண்டனரே, பலர்!! தாம் கண்ட கனவுகளைப் பிறருக்கும் எடுத்துக் கூறியுள்ளனரே! அம்மட்டோ! கனவுகள் நனவாகக் கண்டும் உள்ளனரே? அஃது எங்ஙனம் எனின், அவர்கள் கண்ட கனவுகள், பட்டப்பகலில்! கண்விழித்த நிலையில்!! அவர்களின் கனவு என்பது அவர்கள், தமது எண்ணத்தை வண்ணக்குழம்பாக்கி, அது கொண்டு தீட்டிய ஓவியம்— தமது நெஞ்சத் திரையிலே தீட்டிவைத்த ஓவியம்! அதனைக் காணவேண்டின் அவர்தம் நெஞ்சத்தை அறிதல் வேண்டும்.
ஊமை கண்ட கனவு ஊருக்குத் தெரியாது!
உலுத்தன் காணும் கனவை, ஊருக்கு உரைக்க மாட்டான்.
உத்தமரின் கனவுகள், நனவாகிவிடுகின்றன; உருப்படாதாரின் நனவுகள் கனவாகிப் போகின்றன.
என்று ஏளனம் கிளப்பக் கேட்டிருக்கிறோம்.
என்ற கேலிப்பேச்சுக் கேட்டுள்ளோம்.