உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

இது!! அது, எங்கள் நாடு! பொன்! முத்து! பவழம்! வீரம்! வெற்றி! செல்வபுரி!! அங்கு, கொடிபிடிக்கும் வேலையில் அமர்ந்தாலும் நிம்மதியாக வாழலாம். அதை அறியாமல், அவன் உழல்கிறான்; அவன் உளறுவதுகேட்டு, நீ ஆடலை நிறுத்திவிட்டாய்!! ஆபத்தைத் தேடிக்கொள்ளாதே! அழிவைக் கூவி அழைக்காதே! உயிரோடு இருக்கிறவரையிலேதான், அழகு, இளமை, துடிப்பு, எல்லாம்! பிறகு, பிணம்! காக்கைக்கும் கழுகுக்கும்! மண்ணுக்கும் நரிக்கும்! நான், காக்கை கழுகு, நரி ஆகியவைகளைவிடக் கேவலமா!! உன் எழிலை நான் ரசிப்பேன்— கழுகும், நரியும், உன் சதையைப் பிய்த்துத் தின்னும். எனக்கு உன் இன்மொழி போதும், சுவைதர! அவை உன் இரத்தத்தை அல்லவா குடிக்கும்!! எனக்கு விருந்தானால், எந்நாளும் உனக்குத் திருநாள்! அவைகளுக்கு விருந்தானால் பிறகு மறுநாள் என்பது உனக்கு ஏது? வாடி வடிவழகி! வட்டநிலா முகத்தழகி! தொட்டால் போதுமென்று எட்டிநின்று ஏங்கிடும் ஏந்திழையார், எத்தனையோ பேர்களுண்டு. எதனையும் அறியாமல், எனைவிட்டு விலகுகிறாய்!! குறி தவறிப் போகாது களத்திலே மட்டுமல்ல!!

ஐயோ!! அடப்பாவி!! இதயத்திலே பாய்ந்து...

வீரன் வீசிய கட்டாரி மார்பிலே பாய்ந்துவிட்டது; படைத்தலைவன் மார்பிலிருந்து, இரத்தம் குபுகுபுவெனக் கிளம்புகிறது! கீழே சாய்கிறான்!

ஆடலழகி ஓடோடி வருகிறாள், வீரனிடம்.

வீரர்கள், இருவரையும் பிரிக்கிறார்கள்.

சிறை! தூக்குத்தண்டனை! பலமான பாதுகாப்பு ஏற்பாடு!!

தூக்குக் கயிற்றினை எடுத்து முத்தமிட முனைகிறான். மாற்றானை வீழ்த்திய பெருமையுடன் மடிவது மாவீரனுக்குப் பெரும்புகழ் என்ற எண்ணத்துடன்.

கண்களை ஒருகணம் மூடுகிறான்; அவளைக்காண; மனக் கண்ணால்!

திறக்கிறான்! அவளே எதிரே நிற்கிறாள்; முத்தமிடத் துடித்திடும் அதரம் தெரிகிறது!! கனவு—பட்டப் பகலில்!

இளைஞன்! எனவே, நாட்டின் நிலை குறித்து உள்ளத்து எழுந்த வேதனையினூடேயும், அவன் ஆடலழகியைக் காண்-