உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

கிறான். ஆனால், அவளும், ஆதிக்கக்காரனை எதிர்த்து நிற்கும் துணிவுபெற்றவளாகிறாள்—இளைஞனின் நினைப்பு அப்படி!

இளைஞன் அல்லாமல் ஒரு முதியவர், நாட்டுக்கு வந்துற்ற கேடுபற்றி உள்ளத்தில் எழும் வேதனை கொண்ட நிலைபெற்றார் என்றால், அவருடைய நினைப்பு—பட்டப்பகலில் அவர் காணும் ‘கனவு’ ஆடலழகி பற்றியதாக இராது—நாட்டுப் பெருமையுடன் தொடர்புகொண்டதாக இருக்கும்.

தம்பி! நேற்றுமாலை மடல் எழுதிக்கொண்டிருக்கும் போதே குறிப்பிட்டிருந்தேனல்லவா—வடாற்காடு மாவட்டத் தோழர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று. சென்றுவந்து, பிறகுதான் எழுதுகிறேன். சென்ற ஊர்களிலே ஒரு சிற்றூரின் பெயர் ஐம்படையூர்—இப்போது பெயர், மருவி, கொச்சையாகிவிட்டிருக்கிறது; உச்சரிப்பில் சிற்றூர்! அங்கு நான் நமது கழகக் கொடியினை ஏற்றிவைக்கும்போது இரவு மணி பதினொன்று. சிற்றூர் என்றேன், தம்பி! சிறப்பான வரலாறு இருக்கிறது அந்தச் சீரூருக்கு.

வடபுலத்து மன்னன் புலிகேசி என்பானை, இங்கிருந்து படை எடுத்துச்சென்று தோற்கடித்து, வாதாபி எனும் நகரை அழித்து, வெற்றிவாகை சூடிய, பல்லவப் பெரும்படைகள் ஐந்து திரும்புகாலையில், இந்தச் சிற்றூரில் தங்கி இருந்தனவாம்! கூத்தனார் என்பவர், ஐந்து படைகட்கும் இங்கு, தங்கியிருக்க வசதிகளைச் செய்தளித்தாராம்.

நள்ளிரவில், திராவிடநாடு திராவிடருக்கே! என்ற முழக்கமெழுப்பியபடி, அந்தச் சிற்றூரில், நமது கழகத் தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர். அந்தச் சிற்றூருடன் இணைந்துள்ள வரலாறுபற்றி அறிந்திருந்த எனக்கு, என்ன நினைப்பு எழுந்திருந்திருக்கும் என்பதை விளக்கவா வேண்டும்.

சிறுசிறு குடில்கள்! செல்வம் கொழிக்கும் இடமல்ல! சேறும் சகதியும் நிரம்பிய வழிகள்! ஈச்சை, பனை, முட்செடிகள், புஞ்சைக்காடு, வயல், இவை உள்ள நிலை! அங்கு முன்னே இருவர் வழிகாட்ட, பின் இருந்து பதின்மர் தள்ளிவிட, உளைச் சேற்றில் புதைந்திடாமல் உருண்டுசெல்லும், மோட்டாரில், நாங்கள் செல்கிறோம்.

இந்த வழியிலே, ஜந்துபடைகள், வாகை சூடிய படைகள், வாதாபியை வென்ற படைகள், பவனி வந்தனவாமே!—என்று