உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

எனவே அவர்கள், நமது எண்ணம் ஈடேறாது, திட்டம் வெற்றி பெறாது, கற்பனை கவைக்குதவாது, கனவு பலிக்காது என்று பேசித் திரிகின்றனர். வேறென்ன செய்வர்!

தம்பி! அரவம் கேட்டதும் அச்சம் கொண்டு, தலையை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வது ஆமை மட்டுமல்ல, சில ஆடவரும் உளர்!!

ஆமையாவது, தன்னடக்கத்துடன், தன் நிலைமை பற்றி வாதிடுவதில்லை. வாய்மூடிக் கிடக்கிறது. இவர்கள் ஆமையா! ஆடவர்களல்லரோ! ஆர்ப்பரிக்க வாயும் இருக்கிறதே; ஆர்ப்பரிக்கக்கூட முன்வருகின்றனர்! வாய்! பேசத்தானே!! இதைத் தான் பேசவேண்டும், இப்படித்தான் பேசவேண்டும், பேசுவதிலே பொருத்தம் இருக்கவேண்டும், பொருள் இருக்கவேண்டும் என்றா கவனிக்க முடியும்! பேச, வாய்! எனவே பேசுகின்றனர்!!

தம்பி! இயலாமை காரணமாக, சிலர், இலட்சியத்தை, தூய்மையாளர்களின் எண்ணங்களை, கற்பனைகளை இகழ்ந்திடுவர்; பொருட்படுத்தாதே! இதனை உனக்குக் கூறவே, பட்டப் பகலில் காணும் கனவுபற்றிப், பாட்டுக்கொரு புலவன் பாரதியடா! என்று நாட்டுக்குரியர் கூறிப் பாராட்டிடும் பாரதியாரின் பாடலை நினைவுபடுத்தினேன். மற்றோர் முறை அந்தப் பாடலைப் படித்துப்பார்.


24-9-61

அண்ணன்,
அண்ணாதுரை