146
விளக்கிக்கூறித் தாள் கிடைத்திடச் செய்தார்; இதோ, உன்னிடம் பேசிட முடிகிறது, தம்பி!
ஆனால், மடல் தீட்டி மகிழும் வாய்ப்பினைத்தான், நான் ஒரு திங்கள் இழந்து தவித்தேனேயன்றித், தம்பிகளை நித்த நித்தம் காணத் தவறினேனில்லை; தித்திப்பளிக்கும் உரையாடி மகிழ்ச்சிப் பெறாமற் போகவில்லை; காலை மாலை நடுப்பகல் நள்ளிரவு எனும் கால அளவும் தன்மையும் குறுக்கிடவில்லை. தம்பிகளைக் கண்டு மகிழும் திட்டத்தில். எங்கும் எழில் நிறை முகங்கள்! அன்பொழுகும் பார்வை! புன்னகை! உறுதி! இலட்சியப் பற்று! கொள்கை முழக்கம்! சீரிய பணி!
தம்பி! எங்கு சென்றாலும் ஓர் புதிய துடிதுடிப்புத் தென்படுகிறது; புத்தம் புதியதோர் ஆர்வம்! ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றலைப் பெரும் அளவு மட்டுமல்ல, முழு அளவு காட்டியாக வேண்டும் என்ற நிலையிலே, சுறுசுறுப்புடன் பணியாற்றுகின்றனர். தொட்டுப் பார்ப்பதிலும், கைதட்டி வரவேற்பதிலும், கட்டிப்பிடித்துக் கொள்வதிலும், மாலையிட்டுக் காண்பதிலும், தழதழத்த குரலொலி எழுப்புவதிலும், தங்கநிறக் குழவிகளை என்னிடம் கொண்டுவந்து கொடுத்து இருக்கச் செய்வதிலும், தேர்தல் நிதி அளிப்பதிலும், சேதிகளைத் திரட்டித் தருவதிலும். எத்துணை ஆர்வம், மகிழ்ச்சி, பெருமை கொள்கின்றனர். உடன் பிறந்தார்! இதைக் காணக்காண, மாற்றார் கொள்ளும் மருட்சியும், வேற்றார் காட்டிடும் வியப்புணர்ச்சியும், வளருகிறது, வேக வேகமாக. தாயகத்தின் தன்மானம் காத்திட, மாற்றாரின் முயற்சிகளை முறியடித்திட, களம் புகக் கிளம்பிடும் படையொன்று, வீரநடை போட்டுச் செல்லுங்காலை, வீதிகளின் இருமருங்கிலும், பெண்டிரும் முதியவரும் சிறுமியரும் சிறாரும் கூடி நின்று, கையொலி கிளப்பியும், வாழ்த்தொலி முழங்கியும், பூச்சொரிந்தும் புன்னகை சொரிந்தும், படையினருக்கு வழி அனுப்பு நடத்துவது, கண்டிருக்கிறேன், கண்டிருப்பாய், காட்சிகளாக. பூச்சொரியும்போதே, கண்ணீர் கசியும்! கண்ணீரை விரட்டியபடி களிப்பொளி தோன்றும்! வாழ்த்தொலி எழுப்பும்போதே, வந்திடக் கூடுமே பேராபத்து களத்தில், என்று எண்ணம் எழும். அச்சம் குடையும்; மறுகணமோ, நாடு வாழ்ந்திடும் என்ற உறுதி அச்சந்தனை விரட்டி அடிக்கும். மணமாகித் திங்கள் சிலவே ஆகின்றன! மலர்ச்சோலை உலாவிடவும், மயிலே என்று அவன் அழைக்கக்கேட்டு மகிழ்ந்திடவும், மடியா மலரணையா? விழியா சுடர் ஒளியா? இதழா