உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

செய்யத் தண்ணீர் வைக்க மறந்துவிடுவார்கள். செய்த கறி வகையிலே ஒன்றை இலையிட மறந்து போவதுமுண்டு. இவை யாவும் வீட்டில், உணவு விடுதியில் ஒழுங்காக, வைக்க வேண்டியதை வைத்திட வேண்டிய முறைப்படி வைக்கிறார்கள். கறிவகை பலப்பல! எனினும், தம்பி! நீ, கவனித்ததுண்டோ இல்லையோ—விடுதியிலே, கறியும் சோறும் படைத்திடும் போதும், கலந்து நாமதனை உண்டிடும்போதும், உணவு விடுதிக்காரர் காண்பார், கனிவு இருக்காது; கேட்பார் இன்னும் வேண்டுமா என்று; ஆனால் பேச்சில், எழுத்து மிகுதியாக இருக்கும், எண்ணம் இருக்காது; விழி திறந்திருக்கும் வெறிச்சிட்ட பார்வை இருக்கும்; இது முதல்தரமான உணவு விடுதியில். மட்டமான விடுதி எனில், தம்பி! நாம் சாப்பிடச் சாப்பிட, அவன் முகம் கருத்திடும்; நாம் கேட்போம், அவன் படைக்குமுன் நம்மை உற்றுப் பார்ப்பான்; அந்தப் பார்வையிலே பகை இருக்கும், கேள்வியும் இருக்கும்; நாம் உண்டிடுவோம், இவன் தூரநின்று கவளம் அதிகமாக உள்ளே செல்லச் செல்ல, ஐயோ! நமக்குக் கிடைக்கக்கூடிய இலாபம், குறைந்து கொண்டே வருகிறதே என்று எண்ணி ஏக்கங் கொள்வான். உணவு படைத்திடும் பணியாளன் ஒருமுறைக்கு இருமுறை, நமது இலை நோக்கி வந்து நின்று, என்ன தேவை என்று கேட்டிடக் கண்டால், விடுதிக்கு உரிமையாளன், சதி ஏதோ நடக்கிறது! பயல் நம்மைப் பாழாக்குகிறான்! எண்றெண்ணி, அந்தப் பணியாளனை முறைத்துப் பார்ப்பான்; கடுமொழியும் புகல்வான்.

தம்பி! விடுதியில் உணவளிப்பது இலாப நோக்குடன்; நம்மிடம் கொண்ட அக்கறையாலா!!

விடுதியில் உண்பவர், அளவு குறைத்துச் சாப்பிடச் சாப்பிட விடுதிக்காரருக்கு மகிழ்ச்சி. அளவும் வகையும் அதிகம் கேட்போரைக் கண்டால் வெறுப்பு.

எவரிடமும் கனிவு இருக்கக் காரணமில்லை; ஏனெனில், உண்டுவிட்டுப் போகும் ஓராயிரவரில் இவர் ஒருவர்; ஊர்பேர் தெரிவானேன் ; உபசாரங்கள் செய்வானேன்; உள்ளம் மகிழ வைப்பானேன்!

இதற்கு முற்றிலும் வேறு அல்லவா, இல்லத்துச் சோறிடும் முறை.

நான் கூறியதுபோலத் தம்பி! சோறிடும் முறையிலே குறைபாடுகளும் இருக்கும். சோறுக்கேற்ற அளவு சாறு ஊற்றி-