15
வைகள் எல்லாம் தாங்கள் பெற்ற சுதந்தரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், சிறிய நாடுகளாயினும் பெரிய வல்லரசுகளோடு சரிநிகர் சமானமாக வாழ்வதற்குச் செய்துகொள்ளும் ஏற்பாடுகளே தவிர, வேறில்லை. ஆதலால், திராவிடம் பிரிய வேண்டும் என்பது குறுகிய மனப்பான்மையுமல்ல—உலகப் போக்கிற்கு மாறுபாடானதுமல்ல.
திராவிடம் தனித்து வாழுமா—என்கிறார்கள்; இந்தியா தனித்து வாழ்கிறதா, உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்கா தனித்து வாழ்கிறதா என்றால்—இல்லை; இயலாது. அதைப்போலவேதான். பிரிந்த திராவிடம் தன் நலனுக்கு ஏற்ற வகையில் நேச நாடுகளோடு வியாபார ஒப்பந்தங்களோ, மற்றப் பல ஒப்பந்தங்களோ செய்துகொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவேதான், திராவிடம் பிரிந்தாகவேண்டும் என்று கூறுகிறோம். சின்னஞ்சிறு நாடுகள்—மொராக்கோ, டூனீஷியா, சைப்ரஸ், கணா போன்ற நாடுகளின் விடுதலை வரலாறுகள், விடுதலைக்காகத் தியாகத் தழும்புகளை ஏற்றுத் தங்கள் உயிரைக் கொடுக்க முன்வந்த இலட்சக்கணக்கான மக்கள்—விடுதலைப் போராட்டம் நடத்துகின்ற அல்ஜீரியா, நயாசாலாந்து, திராவிடம் போன்ற நாடுகளுக்கு நம்பிக்கையையும், ஊக்கத் தையும் ஊட்டுகின்றன.
இந்தப் பணியை—தாய்த்திருநாட்டினை மீட்கும் பணியை ஏற்க இன்று திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் தேசிய இயக்கமாக வளர்ந்துள்ளது. இதன் வரலாறு குறுகியகால வரலாறு என்றாலும், “பெருமைமிக்க வரலாறு.”
வாய் குளிர, கேட்போர் காதுகுளிர, பெருமை மிக்க வரலாறு!—என்று பேசக் கேட்டோம். ஒருமுறை அவரை எண்ணி நன்றி கூறிக்கொள், தம்பி! இனி அந்தப் ‘பெருமை மிக்க வரலாறு’ எப்படி ஏற்பட்டது என்பதை எண்ணிப்பார். இன்றுள்ள எதிர்ப்பு, புத்துமல்ல எதிர்ப்புமல்ல என்பது விளங்கும்.
வசவாளர்கள் இழிமொழி வீசினர்; பழி சுமத்தினர்; ஏளனம் செய்தனர்; எதனையும் நாம் பொருட்படுத்தவில்லை. அதனால்தான், குறுகியகால வரலாறு என்றாலும், பெருமை மிக்க வரலாறு என்று நற்சான்று அளித்தார் நண்பர்—அன்று.