உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151

சாப்பாட்டுக்கும் உணவு விடுதிச் சாப்பாட்டுக்கும் இருக்கிற மாறுபாடுதான் நினைவிற்கு வருகிறது.

அமைச்சர்களைக் காண வருகிறார்கள்—ஊரூரும். யார்? இவர்களெல்லாம் அமைச்சர்களாகிவிட்டார்களே! இப்படியும் காலம் கெட்டுவிட்டதே!!—என்று எண்ணி உள்ளூரக் குமுறிக் கிடக்கும் கனதனவான்! அருவருப்பை அடக்கிக்கொண்டு அதிர்ஷ்ட வசத்தால் அமைச்சரானார், அவரைப்பிடித்து மருமகனுக்கு ஒரு பெரிய வேலையைத் தேடிக்கொண்டால் போதும் என்ற நினைப்பினர்!! ஏழை எளியவரும் வருகிறார்கள், தவறு தம்பி! தவறு! அழைத்து வரப்படுகிறார்கள் ; அமைச்சர் வருவதற்கு ஐந்தாறு மணிக்கு முன்பே அந்த இடத்திலே. அதிகாரிகள் நடத்திடும் அமுலையும், சீமான்கள் மோடாரில் வந்திறங்கி இடம் பிடிப்பதையும், பார்த்தபடி நிற்கிறார்கள். அமைச்சர்கள் பலப்பலர் வந்தார்கள், அவரவர், தெரிந்ததைச் சொன்னார்கள். ஒருவரும் நம் குறை போக்கவில்லை, ஓட்டாண்டியாகிறோம் நாளுக்குநாள், என்று நினைத்தபடி. அமைச்சர் வந்துகொண்டே இருக்கிறார் என்பது அறிவிக்கப்படுகிறது, முன்னோடியாக வரும் அதிகாரியால். மோடார் மன்னர்கள், உடையைச் சரிப்படுத்திக்கொள்கிறார்கள், அணிபணியை ஒழுங்குபடுத்திக்கொள்கிறார்கள், அதிகாரியை நோக்கிப் பல்லிளிக்கிறார்கள். அதன் பொருள் அவர் அறிவார், யாதெனின், அமைச்சர் அருகே அழைத்துச் செல்வீர், ஐநூறு ரூபாய் தந்தவன் நான், என்பதாகும்; அதிகாரியோ, வரிசையாக நிற்கும் கனதனவான்களைப் பார்க்கிறார், பெருமூச்செறிகிறார். ஏனோவெனில், அவர் அறிவார் எவரெவர் எந்தெந்த விதமான கேடுகள், குற்றங்கள் செய்த பின்னர், சீமான்கள் ஆகினர் எனும் மர்மம்; எனினும் சட்டம் அவர்களைச் சாடவிடாமல் சாமர்த்தியமாகத் தப்பினவர் என்பது புரிந்த அதிகாரி, என்செய்வது என்றெண்ணி ஏங்குகிறார். அவரும் சிரிக்கிறார், இவர்களும் அப்படியே—எவர் சிரிப்புக்கும் காரணம் மகிழ்ச்சி அல்ல; எல்லாம் இடத்துக்கு ஏற்றமுறை. ஏழைக்கு இதுவொன்றும் விளங்கவில்லை. உதடு அசைகிறது யாவருக்கும்; ஒருவருக்கும் உள்ளம் அசைவதாகத் தெரியவில்லை.

அமைச்சர் வருகிறார், கும்பிடுகிறார்; குறிப்பாக யாரையும் பார்த்தல்ல: மொத்தமாக; மெத்த அலட்சியத்துடன்.

அனைவரும் வாயடைத்து நிற்கின்றனர்; அதிகாரிகள் பரபரப்புக் காட்டுகின்றனர்.