179
எனத் தரகர் கேட்டிடும்போது, ‘ஓட்டு’ உள்ள மக்கள் மனதில், என்ன எழும்? பற்றும் பாசமும் நேசமுமா? இல்லை, தம்பி! அவை அல்ல! திகைப்பு, திகில், வெறுப்புணர்ச்சி! இவர்க்கெலாம் காங்கிரஸ் புகலிடமா! என்று இவர் நல்லது செய்திட்டார்? கொன்றவனைக் கண்டறிந்து, மாலைகள் சூட்டிடச் செல்வானோ, மகளை இழந்து துயரம் உறும் தகப்பன் தரம் மிகக் குறைந்திடினும்!!
எத்துணை பணபலம் காட்டிடினும், எத்தருக்கெல்லாம் இடமளித்து, மற்றவர் வாழ்வை மதியாது, தேயவைத்து ஆண்டுவரும், காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்காமல், காட்டிக் கொடுப்பதோ மக்கள் தமை?
போனதெல்லாம் போகட்டும்; பொல்லாங்குகள் இனிப் போகும்; நல்லவை பலவும் நாம் தருவோம், எனச் சொல்லாலாகிலும் வரமளிக்க, காங்கிரஸ் கட்சி முன்வருமா? அதுவும் இல்லையே!
விலைகள் குறைக்கச் சொல்லாதீர்! விம்மி விம்மிக் கிடக்காதீர்!
விலைகள் குறைய உள்ள வழி, வயிற்றை இறுக்கிக் கட்டுவதே! வேறு முறைகள் கிடையாது! சோறு குறைத்துச் சுகப்படு!
வரிகள் வளரும். சொல்லிவிட்டேன்! குறைகள் பேசிக் கிடக்காதீர்! கொடுக்கவேண்டும், புது வரிகள்!!
கடன் சுமை ஏறும், குறையாது! கட்டுக்கடக்க முடியாது!
தொழில்கள் நடத்த முதலாளி! தோழமை அவருடன் கொண்டுவிட்டோம்! இதுவோ சமதர்மம் எனக்கேட்டு பேசுதல் தீது; சிறை உண்டு!
கொள்ளை இலாபம் அடிப்போர்கள் கொட்டம் அடக்கு என்றெல்லாம் கூச்சலிடாதீர், அவரெல்லாம் கதரை அணிந்தார், காணுங்கள்; காங்கிரசானார் கேளுங்கள்!
நோயும் நொடியும் போக்கிவிட, மாய மந்திரம் கற்றோமா! பிறப்பார், இறப்பர், அதற்கென்ன? பிரபஞ்ச மர்மம் இதுதானே!!