180
இப்படியல்லவா, தம்பி! காங்கிரஸ் கட்சி, துணிந்து கருத்து அறிவிக்கிறது.
இன்று உள்ள நிலையில், ஏழைகள், மறைமுக வரியினால் மிகவும் கொட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பொருளாதார நிபுணர்களெல்லாம் எடுத்துரைக்கிறார்கள். எனினும், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், 1600 கோடி ரூபாய் வரியாம்! அதிலே பெரும் பகுதி மறைமுக வரியாமே! கேட்டனையா, அக்ரமத்தை!! கேட்பார் இல்லை என்ற துணிவன்றி வேறு என்ன? குலைநோயால் கதறுபவன், தாளம் தவறிப் பாடுகிறான் எனக் கோல்கொண்டு தாக்கிடும் கொடியவன் ஒருவன் இருந்தானெனக் கதையிலும் இல்லை; ஆனால் தம்பி! குமுறி ஏழை அழிகின்றான், அவனைக் காங்கிரஸ் கட்சி பார்த்து, கிளர்ச்சி செய்தால் துப்பாக்கி, சுடுவது கொல்ல, அறிந்திடு, எனச் சொல்லக் கேட்கிறோம்; என் செய்தோம்!
திட்டம் தீட்டினோம் பாரென்றார். கொட்டினர் வரிப்பணம் கோடி கோடி! ஒட்டிய வயிற்றினர் பாடுபட ஒய்யாரச் சீமான்கள் கொழுக்கின்றார். வளருது செல்வம் திட்டத்தால், வகை வகையாக என்று சொன்னார்; வறுமை வாட்டம் போகாமல், வலிவு இழந்து ஏழை மக்கள் கோடிகோடி இருக்கின்றார்! வளர்ந்த செல்வம் ஒளிந்தது எங்கே?
தேடச் சொல்லி குழு ஒன்றைத் தேசம் ஆளும் நேரு பிரான், அமைத்து அறிவித்துவிட்டார்; அக்குழு பேச்சு மூச்சுமில்லை!!
செல்வம் யாவும் ஒரு சிலரின் கரத்தில் சிக்கிக் கொண்டதென, செப்புகிறார் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார்—முன்னாள் நிதி அமைச்சர்! அங்ஙனம் அவர் கூறுவதை, யாரறிவார் எனும் எண்ணமுடன், இங்குள நிதி அமைச்சரவர், சுப்பிரமணிய பெருமானார், சொல்லுகிறார் சொகுசாக, செல்வம் பரவிவிட்டது காண்! செழுமை எங்கும் வழிந்திடுது! ஏழை வாழ்வு மலர்ந்திடுது! எல்லாம் எம்மால்—என்னால் தான்!!— என்று அடித்துப் பேசுகிறார்! அபத்தம் அலவோ, எனக் கேட்பாய், ஆமாம், ஆனால் அமைச்சர்நிலை, அதற்கும் பயன் படவில்லையெனில், எற்றுக்கந்தப் பதவி என எதிர்த்துக் கேட்பார்; வெகு தீரர்!
ஏழை மக்கள் தொகை தொகையாய் ஏங்கிச் சாகும் நிலையில் உள்ளார்!—என்று நாம் கூறவந்தால், ஏடா மூடா!