184
உழைத்து வாழும் உத்தமரே!
உலகம் உமது உணர்வீரே!
உடனே வருவீர் புதுப்பாதை
உதயசூரியன் ஒளிதருமே!
என்று எடுத்துக் கூறலாமே, தம்பி! பேச்சாக, பாட்டாக! துண்டு வெளியீடுகளாக! செய்வாயா, தம்பி! நாள் அதிகம் இல்லை.
தம்பி! துவக்கத்திலே குறிப்பிட்டேனே,
இழிமொழி
பழிச்சொல்
இவைகளை, நம்மை அழித்திட எண்ணுவோர் கூறிடும்போது கோபம் கொள்வதிலே, துளியும் பயன் இல்லை. சொல்லப் போனால், நாம் கோபமடையவேண்டும், நம் குணம் கெட வேண்டும், பாதை தவறவேண்டும், பண்பு பாழாகவேண்டும். இலட்சியத்தை இழக்கவேண்டும் என்பதற்காகவே அவர்கள் ஆத்திரமூட்டும் பேச்சுக்களைப் பேசுகிறார்கள். அதை அறிந்து, தம்பி! அந்தப் பேச்சுகள் பற்றிய கவலையை விட்டொழித்து, நாட்டுக்கு நாம் எடுத்துக்கூறவேண்டிது ஏராளம் இருக்கிறதே, அவைகளை எடுத்துச் சொல்வதற்குப் போதுமான நாட்கள்கூட இல்லையே என்பதை எண்ணி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில், சிறு சிறு பங்கு செலுத்தவேண்டும் என்ற தன்மையில், துண்டு வெளியீடுகள், சுவரொட்டிகள், திரை ஓவியங்கள், என்பன போன்றவைகள் மூலம், காங்கிரஸ் ஆட்சியினால் ஏற்பட்ட கேடுபாடுகளை நாட்டு மக்களுக்கு எடுத்து கூறு. தம்பி! பார்த்துக்கொண்டிருக்கும்போதே, நாட்கள் பறந்தோடிப் போகின்றன!
தம்பி! புள்ளினம் இசை எழுப்புகிறது, மெல்லிய இசை! என் அருகே படுத்துறங்கும், கவுன்சிலர் இராசகோபாலுடைய குறட்டைச் சத்தம், சுருதி இல்லாத சங்கீதமாக இருக்கிறது. வளை ஒலி ! தொலைவில்! மாதர்கள், இல்லங்களைத் துப்புரவு ஆக்குகிறார்கள். பொழுது விடிகிறது, தம்பி! உதயசூரியன் எழுகிறான்! உலகுக்கு ஒளி கிடைக்க இருக்கிறது! இருள் கலைகிறது!!