உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183

பெரிய தொகை? ஆமாம்! ஆனால் கசக்குமா, கொடுக்க? காங்கிரஸ் ஆட்சியால் மட்டுந்தானே, தம்பி! சமதர்மம் பேசிக் கொண்டே இப்படிப்பட்ட முதலாளிகளை ஆதரிக்க முடியும்! அந்த ஆதரவின் காரணமாக பிர்லாவின் மோடார் கம்பெனிக் கிடைத்த இலாபம் (160ல்) எவ்வளவு தெரியுமா 2, 85, 71, 127 ரூபாய்! கொடுக்க மனம்தான் வராதா? கைதான் நீளாதா!? டாட்டாவுக்கு? 5 கோடி 77 இலட்சம் இலாபம்!

தம்பி! பணபாணம் காங்கிரசிடம் இருக்கிறதே என்று பதறாதே, அந்தப் பணபாணம் எப்படித் தயாரிக்கப்படுகிறது, என்பதை நாடு அறிந்திடச் செய்திடு, பிறகு பார், அந்தப் பணபாணத்தை, மக்கள், எத்துணை துச்சமென்று கூறிக் காரித் துப்பிவிடுகிறார்கள் என்பதை.

சமதர்மம் பேசுவது, முதலாளிகளை மிரட்ட! எமது குறிப்பறிந்து நடந்துகொள்ளாவிட்டால், சமதர்மத் திட்டப்படி, தொழில்களை நாங்களே நடத்தத் திட்டமிட்டு விடுவோம்; உமது கொட்டம் அடங்கிவிடும் என்று கூற!

அதேபோது, முதலாளிகளிடம் தொழில்களை விட்டு வைப்பது, இலாபத்தில் பங்குபெற! நாடு வாழ அல்ல! தொழிலாளர் வாழ அல்ல! காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதிக்காக!! அதாவது, பணபாணம் தயாரித்துப் பொதுமக்களை மிரட்ட. தம்பி! மக்கள் இதனை அறியச்செய் —பார் பிறகு பணபாணம், பஞ்சு பஞ்சாகப் பறந்துபோவதை.

டாட்டா பிர்லா கூட்டாளி
பாட்டாளிக்குப் பகையாளி!

என்பதை எங்கெங்கும் எடுத்துக் கூறு, தம்பி! இன்றே உன் பொழுதுபோக்குச் செலவுக்கென உள்ள சிறு தொகையை, இதற்கு ஒதுக்கி துண்டு வெளியீடுகளைப் பரப்பலாமே!!

சாக்கடையில் ஊறியது என்று தெரிந்தால், கரும்புத் துண்டினை எவர், விரும்பிச் சுவைப்பர்?

வாட்டம் போக்காக் காங்கிரசு
நோட்டம் பார்க்குது ஓட்டுப்பெற
பாட்டாளித் தோழர்களே!
பட்டது போதும்; விடுபடுவீர்!