உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

எவ்வளவு தேவைப்படும் ஒரு திட்டம் தீட்டிக் கணக்குப் போட்டுச் சொல்லுங்கள் என்று, தமிழகக் காங்கிரஸ் அரசு நிபுணர்களைக் கேட்டிட, அவர்கள் பல நாட்கள் பாடுபட்டு, புள்ளி விவரங்களைத் தேடிக் கண்டெடுத்துக் கோர்த்து, திட்டம் தயாரித்து, 600 கோடி வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர்.

பார்த்தவுடனே துரைத்தனத்துக்கு, ஆசையாகத்தான் இருந்தது; ஆனால் உடனே அச்சம் குடைந்தது, அவ்வளவு எங்கே கொடுக்கப்போகிறார்கள் என்ற பயத்தால், 600 கோடியை 400 கோடி என்று குறைத்தார்கள். அந்த 400 கோடியை, டில்லியில் உள்ள பேரரசு 291 கோடியாகச் குறைத்தது! சரி! என்றனர். வேறு? பிடிவாதம் பேசினால், பதவி நிலைக்குமா! பதவி இல்லையெனில், பணக்காரர்களின் கூட்டுறவு கிடைக்குமா? அந்தக் கூட்டுறவு கிடைக்காவிட்டால் பண பாணம் எப்படித் தயாரிக்க முடியும்!!

தம்பி! டாட்டா பிர்லா எனும் இரண்டு செல்வவான்களிடம் மட்டும், இன்று, உள்ள தொழில்கள் எவ்வளவு தெரியுமா? ஏறக்குறைய 600 கோடி ரூபாய் மூலதனம் போடப்பட்டுள்ள தொழில்! கொழுத்த இலாபம் கிடைக்கிறது! மானைக் கொல்வது வேங்கை! ஆனால், புதரருகே உள்ள நரிக்கும், சிறுசிறு துண்டுகள் உண்டல்லவா? அதுபோல, இந்தக் கோடீஸ்வரர்கள் பெறும் கொள்ளை இலாபத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு, தேர்தல் நிதியாகக் கிடைக்கிறது.

டாட்டா கம்பெனி முன்பு பெருந்தொகை, காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் நிதியாகக் கொடுத்ததும், வழக்குப் போடப்பட்டதும், அதுபோது நீதிபதிகள் எடுத்துரைத்த அற உரையும் அறிந்திருப்பாய்.

தம்பி! கான்பூர் எனும் திருத்தலத்துக்கு, இப்படிப்பட்ட முதலாளிமார்களிடம் நன்கொடை பெற, நேரு பண்டிதர், நடத்திய புனிதப் பயணம் பற்றி, இதழ்களில் படித்திருப்பாய்

கொள்ளை இலாபம் அடிப்போரிடம் ‘கைநீட்டுவது’ பஞ்ச சீலம் பேசும் பண்டிதருக்கு, ஆறாவது சீலமாகி விட்டது! அவர் என்ன செய்வார், பாவம், அவரை நம்பித் தேர்தலில் ஈடுபடுவோர் அவரைப் பிய்த்து எடுக்கிறார்கள்.

பிர்லாவுக்குச் சொந்தமான இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி மட்டும், இம்முறை, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதிக்காக, இருபது இலட்சம் கொடுத்து!