உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181

நாடதனை அறிவாயோ நீ, கூறிவிடு! நானா, நீயா, அமைச்சர்? அதை மறந்து பேசுவதழகல்ல!!— என்று கேட்டுவிடத் துணிவுண்டு—ஆற்றலரசர், அவர் தமக்கு, அவனி காலுக்குப் பந்து, அறிவுக்கடலின் நீர் முழுதும், அவரது வாய்க்கு ஒரு முழுங்கு!!

ஆனால் டி. டி. கே. முன்னாள் நிதி அமைச்சர், கூறிவிட்டார் நூற்றுக்குத் தொண்ணூற்று ஐந்து பேர், தரித்திர நிலையில் காலந் தள்ளுகிறார்கள்; பணம் ஒரு சிலரிடம் சிக்கிக்கொண்டு விட்டது என்று.

தம்பி! நாட்டு நிலைமை புரிகிறதல்லவா? உனக்குப் புரிகிறது. ஆனால், மற்றவர்க்கு? புரியச்செய்யவேண்டியது, உனக்கு உள்ள புனிதக் கடமை! அதனை இன்றே துவங்கு.

காங்கிரசாட்சியினால் விளைந்த கேடுபாடுகளை விளைக்க முன்பு—இரு கிழமைகளுக்கு முன்பு—வெளியிட்டிருந்தேனே! கருத்துரைகள், ஏன் தம்பி! அவைகளைத் துண்டு வெளியீடுகளாக்கி, மக்களுக்குத் தந்தனையா? ஆம், எனில், ஏன் எனக்கு ஒன்றுகூட, உள்ளம் களிப்படையும் முறையில் அனுப்பி வைக்கவில்லை? திரைகளிலே தீட்டி, கழகத்திலே தொங்கவிட்டிருக்கலாம், செய்தனையோ? தம்பி! காங்கிரசின் பணபாணம், நம்மை ஒன்றும் செய்யமுடியாதவிதமான, ‘கேடயம்’ அல்லவா, அந்தக் கருத்துரைகளை ஓவியமாக்குவதும், ஊருக்கு அறிவிப்பதும்.

தம்பி! 1100 கோடி ரூபாய் செலவிலே மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டாகிவிட்டது, தெரியுமல்லவா? ஏது அவ்வளவு பணம்? என்று கேட்கிறாயா? நாடுநாடாகச் சென்று கடன் வாங்கியும், ஓடாகிப் போயுள்ள நிலையிலும் மக்களை விடாமல் வரிகளைப் போட்டும், நோட்டுகளை அச்சடித்துக் குவித்தும், இந்தப் பெருந்தொகையைப் பெற வழிகண்டுள்ளனர். 11000 கோடி!

நமக்கு இதிலே—தமிழக துரைத்தனத்தாரின் அளவிடற்கரிய ஆற்றலின் காரணமாகக் கிடைப்பது, எவ்வளவு தெரியுமோ? 291 கோடி!!

தமிழகக் காங்கிரஸ் அரசு 400 கோடி கேட்டது. கிடைத்தது, 291 கோடிதான்!