உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195

தரகர் யார்? அவருக்கு என்ன தரவேண்டும்? என்பது தெரியும்! எந்தத் தொகுதியில் எந்த ஜாதி மக்கள் அதிகம்? அது தெரியும்! மயக்குவதா மிரட்டுவதா அந்த மக்களை? அது தெரியும்! காங்கிரஸ் நடாத்திய வீரப்போராட்டங்கள், விறுவிறுப்பான சம்பவங்கள், எதுவும் தெரியாது.

அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கையே இன்றைய காங்கிரசில் அதிகம்! அந்த எண்ணிக்கை வேகமாக வளர்ந்தும் விட்டது. அதுகண்டுதான், ஒரு நல்ல கட்சி, நாட்டுக்கு விடுதலை பெறப் பாடுபட்ட கட்சி, சபர்மதி முனிவர் என்று சான்றோர் போற்றிய காந்தியார் வளர்த்த கட்சி, இன்று இந்தக் கதிக்கு வந்துவிட்டதே என்று மனம் குமுறி, மனதில் உள்ள பாரத்தைக் குறைத்துக்கொள்வதுபோல், இலட்சுமி மேனன் அவர்கள் அவ்வளவு வெட்டவெளிச்சமாக்கிவிட்டார் உள்ள ஊழல்களை!

அதுசரி அண்ணா! இலட்சுமி மேனன் எப்போது அப்படிப் பேசினார்கள்? எங்கே பேசினார்கள்? காங்கிரசில் உள்ளவர்கள், என்னைக் குடைந்து எடுப்பார்களே! உங்கள் அண்ணாத்துரை கூறுவது அண்டப்புளுகு என்பார்களே! நான் என்ன பதில் அளிக்க?— என்று கேட்கத் துடிக்கிறாய்— தெரிகிறது தம்பி! கூறுகிறேன், விவரம், தெரிந்துவைத்துக்கொள்.

பத்து நாட்களுக்கு முன்பு நாகபுரியில் காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. நாகபுரி நகர காங்கிரஸ் குழுத் தலைவர், தலைமையில்! அதிலேதான் அம்மையார், ‘இலட்சுமி மேனன்’ இன்றைய காங்கிரசாரின் போக்கை அம்பலப்படுத்திக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார். ஆங்கிலப் பத்திரிகையான “Times of India” டைம்ஸ் ஆப் இந்தியாவில் விரிவாகவே வெளியிடப்பட்டிருக்கிறது.

அம்மையார் அருளிய மணிவாசகங்களிலே சில கூறவா?

“நேரு ஒருவர் மட்டுமே காந்திய வழியைக் கடைப்பிடிக்கிறவர்; மற்றக் காங்கிரசாரில் மிகப் பெரும்பாலோர், காந்திய வழி நடப்பதாக ஆணையிடுகிறார்கள். ஆனால், அவர்கள், இந்தியாவில் உள்ள பிற்போக்குச் சக்திகளின் பிரதிநிதிகளாகவே உள்ளனர்.”

கபடர்! காதகர்!—எனும் கடுமொழிகள். அம்மையாரின் இந்தப் பேச்சிலே தொக்கி நிற்கின்றன என்பதைப் புரிந்துகொண்டாயல்லவா?