உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225

அவ்வளவு நேர்த்தியானதாக ஆகிவிட்டுப், பாருக்கே பஞ்சசீலம் போதிக்கும் நிலையைத் தேடிக்கொண்டார்.

குருஷேவும் தெகாலும், மாக்மிலனும் அடினாரும், கென்னடியும் நடந்து கொள்ளும் முறை சரியா என்பது பற்றிக் கருத்துரை வழங்குகிறார் நேரு! இவர், நான் சட்ட சபைக்குப் போனது எதற்காக? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். எனக்கே வேதனையாக இருக்கிறது. அமெரிக்கா சென்றிருந்த நேரு பண்டிதர், உலகப் பொதுப் பிரச்சினைகள் பற்றிக் கென்னடியுடன் பேசாமல், உருளைக்கிழங்கு பொடிமாஸ், செய்வது எப்படி? என்பதுபற்றிப் பேசிவிட்டு வந்தால், உலகு அவரைப்பற்றி என்ன நினைக்கும், கூறும்? பெரியார் என்னைத் திட்டும்போது, அதுபோலத்தான் கேட்பவர்களுக்குத் தோன்றும்.

ஆண்டுபல ஆகிவிட்டாலும், எனக்கேகூட, நேருபண்டிதர் குருஷேவுடனும், டிட்டோவுடனும், மாக்மில்லனுடனும், நாசருடனும் பேசுகிறார் என்று கூறும் நிலைபெற்றிருக்கும் நேரத்தில், பெரியார், மண்டலக் காங்கிரஸ் தலைவர் மாரிமுத்துவிடமும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏகாம்பரத்திடமும் பேசிக்கொண்டிருக்கும் நிலையைக் காணும்போது, வருத்தமாகத்தான் இருக்கிறது. நேருவுக்கு நியூயார்க்கில் வரவேற்பு என்கிறார்கள்—பாரிசில் விருந்து என்கிறார்கள்—பெரியாருக்கோ, சாத்தூரில் சால்வை போர்க்கும் விழா, வேலூரில் எடைக்கு எடை காசு தரும் விழா என்கிறார்கள்—நடத்துபவர்களில் நடுநாயகமாக இருப்பவர், காங்கிரஸ்காரர் என்கிறார்கள்!— கேட்கும்போதே கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்யட்டும் தம்பி! யானைமீது அம்பாரி அமைத்து ஏறிச்செல்கிற ஒருவர், திடீரென்று கீழே குதித்து, நான் உடும்பு பிடிக்கப்போகிறேன் என்று ஓடினால், எப்படி இருக்கும்! அப்படி இருக்கிறது பெரியாரின் இன்றைய நிலை!!

இந்த நிலைக்குப் பெரியாரைக் கொண்டுவந்தாகிவிட்டது. இனி, தி. மு. கழகத்தை ஒழிக்கவேண்டியது ஒன்றுதான் பாக்கி என்ற நினைப்பில், இந்தத் தேர்தலை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுப் பணியாற்றுகிறார்கள் காங்கிரசார்.

ஆசை காட்டினோம் மயங்கவில்லை!
அதட்டிப் பேசினோம் அஞ்சவில்லை!