23
தமிழ்நாடா? திராவிடநாடா? என்பதற்கான விளக்கப் பேச்சுக்கள் அதிகப்பட அதிகப்பட, இந்தியப் பேரரசின் இறுமாப்பு, ஆதிக்க வெறி, சுரண்டல்முறை, இனம் அழிக்கும் கொடுமை, என்பவை குறித்த பேச்சுக் குறையும், மறையும். அந்தப் பேச்சுக் குறையக் குறைய, உரிமை உணர்ச்சி உருக்குலையும். தனி அரசுத் திட்டம் துருப்பிடித்துப்போகும், விடுதலை அணி உடைபடும்; சிதறுண்டுபோகும்.
நாம், தம்பி! ஒருதுளியும் இந்த நிலைமை எழ இடமளிக்கக் கூடாது.
வடக்கு வேறு—தெற்கு வேறு—என்ற விளக்கம் இப்போது நல்ல முறையிலே கிடைத்து, மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர்.
‘வடக்கு நரகலோகமுமல்ல—வடக்கே உள்ளவர்கள் யமகிங்கரருமல்ல’ என்ற புதிய சித்தாந்தம், மக்கள் காதுக்கு நாராசமாக இருக்கிறது.
எனக்குள்ள மகிழ்ச்சி, தமிழ்நாடு தனிநாடு ஆகவேண்டும் என்று கூறும் ஆதித்தனார், இப்படிப்பட்ட ஒரு ஆபாசமான சித்தாந்தத்தை ஏற்கவில்லை என்பதுதான்.
வடவரின் பிடியை எதிர்ப்பதில், இந்தியப் பேரரசு கூடாது என்பதில், ஆதித்தனார், தீவிரம் காட்டுவதை வரவேற்கிறேன், மகிழ்கிறேன் — வடநாடு நரகலோகமுமல்ல, வடவர் யமகிங்கரருமல்ல அவர் என்று அவர் கூறவில்லை. அவருக்கு இல்லை அந்தக் கெடுமதி! அந்த நிலைமைக்குத் தாழ்ந்துபோகவில்லை. தலை நிமிர்ந்து நின்று, தமிழ்நாடு தமிழருக்கு என்றார்! அதுகேட்டு நான் இன்புறுகிறேன்.
இந்தியப் பேரரசு என்பது அரசியல் ஆதிக்கத்தால் இறுமாந்து கிடக்கும் ஒரு புதிய ஏகாதிபத்தியம்; வடநாட்டு முதலாளிகளுக்கு அமைந்துள்ள கோட்டை; தென்னாட்டைத் தேயவைக்கும் சுரண்டல் இயந்திரம், என்ற பேருண்மையை இப்போது மக்கள், மிக்கத் தெளிவாகத் தெரிந்துகொண்டுவிட்டனர்.
இந்த உணர்ச்சி பாழாகும்படியான பேச்சிலே ஈடுபடுபவர்களைவிட நாட்டுக்குக் கேடு செய்பவர்கள் வேறு எவரும் இருக்கமுடியாது.