உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

ஆரணங்குகளும் பயணப்படுகின்றனர், தாயக மீட்புக்கான சூளுரை எடுக்க, திருப்பரங்குன்றம்.

தம்பி! உன்னைக்காண, நான் வருகிறேன், திருப்பரங்குன்றம் என்று சொல்லவா வேண்டும். நீதான் என்னைக்கட்டிப் போட்டுவிட்டிருக்கிறாயே, உன் அன்பினால்.

திருப்பரங்குன்றம் மாநாடு எழிலுடன் ஏற்றத்துடன் உன் சீரிய நடைபெற, கருத்துரைகளை எடுத்துரை, தி. மு. கழகம், கூட்டு முயற்சியால் ஈட்டிய கருவூலம் உள்ள பெட்டகம். இங்கு ‘எல்லாம் எனக்குத் தெரியும் என்ற பேச்சுக்கு இடம் இல்லை. அந்தப் போக்கு முற்றினால், பொது வாழ்வுக்கு வந்தது பெருந்தொல்லை. துவக்க முதல், நாம் கட்டிக் காத்துவரும் ‘தோழமை’.... திருப்பரங்குன்றத்தில், கோடையிலே இளைப்பாறிக் கொள்ளக் கிடைத்த குளிர் தருவாய், இதயப் பூங்காவில் உள்ள எழில் மலராய், நமக்கு இனிமை பயக்கட்டும். பயணத்தில் மிக முக்கியமான கட்டம் வந்துள்ளோம், திருப்பரங்குன்றம், மேற்கொண்டும் பயணமாகி வெற்றியூர் சென்றிடும் அறிவாற்றலை நமக்கெல்லாம் அளிக்கட்டும்.

மாற்றார் தம் மனம்போன போக்கிலே ஏசட்டும், பேசட்டும்; செவிபுகவிடாதே. நாம் மேற்கொண்டுள்ள பணி மகத்தானது. தூய்மையுடன் கூடிய தோழமை கலந்த, கூட்டு முயற்சி மட்டுமே, நமக்குள்ள அழியாச் செல்வம். கண்ணீருடன் பிறந்தோம். அந்தக் கண்ணீரும் கேலி செய்யப்படுகிறது. அது கேட்டுக் கண்ணீருக்கிடையிலே ஓர் புன்னகையும் பூத்திடும் முகம் காட்டுகிறோம். நம்மை நிந்திக்கிறார்களே என்று கலக்கமடையாதே; நாராச நடையாலே, நம்மை அழிக்க நினைத்தோர்கள் பலர்; நாம் அழிந்தோமில்லை. காரணம், நம்மை நாட்டுக்குரியதோர் நற்பணியில் ஈடுபடுத்திக் கொண்டுவிட்டோம்.

ககனப்பூ வந்திமகன், கொய்தானாம்
அதைக்கண்டு குருடன் அம்பால் எய்தானாம்
செகமிசை ஊமையனும் வைதானாம்
அதைச் செவிடன் கேட்டு நகை செய்தானாம்
கரமில்லான் வாதியைப் பிடித்தானாம்
காலில்லான் உதைத்துதைத்து இடித்தானாம்
சிரமில்லாதவன் கடித்தடித்தானாம்


xi.—4