82
நறுமண மலர் தூவுகிறோம்; குளித்திடப் பன்னீர்வேண்டுமா? உடுத்திடப் பட்டுப் பட்டாடை தேவையா? பூண்டிட, அணிகள் வேண்டுமா? கொடுக்கக் காத்துக்கொண்டிருக்கிறோம்! கோலாகலமாக விழா நடத்திக் காட்டுகிறோம்! கேட்டு கண்டு களியுங்கள்—காதுகுளிர வாழ்த்துகிறோம். இன்புறுங்கள்!—என்றெல்லாம் பேசிப், பாசம்காட்டி, நேசம் பெற்றால், கிடைக்கக்கூடிய, ‘பசையும் ருசியும்’ விழியில் படுகிறது—மனதிலே ஆசை அலைமோதுகிறது! அந்தக் கொந்தளிப்புத்தான், உரத்தகுரல் முழக்கமாகிறது! கள்தானே தம்பி! பொங்கி வழிகிறது! இளநீர்? அப்படி இல்லையல்லவா? உற்றுப்பார்த்தால் தெரியும், வெண்ணெயைவிடச் சுண்ணாம்பு, பளபளப்பான வெண்மை நிறம் காட்டுகிறது!
நான் படித்துக்கொண்டிருந்த ஏடு, பிழைக்கத் தெரிந்தவர்கள் கட்டித்தழுவி, உச்சிமோந்து முத்தமிட்டுக், கண்ணே! கற்பகமே! கலிதீர்க்கவந்தவனே! என்று கொஞ்சிடும் நிலையைக் காங்கிரஸ் பெற்ற நாட்களிலே, பேசப்பட்டவைகள் அல்ல; இது என்ன வீண் வேலை! தலைகீழாக நின்றாலும் இவர்களின் எண்ணம் ஈடேறாதே! உயரஉயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? வீணாக உதைபட்டுச் சாகிறார்கள்! பிடிபட்டு வதைபடுகிறார்கள்! ஆற்றல் இல்லாமலா, அவ்வளவு தொலைவிலிருந்து, இங்குவந்து, நம்மை அடக்கி ஆளமுடிகிறது வெள்ளையரால்! படைகொண்ட முடிமன்னர்களெல்லாம், அவனைப் பகைத்துக்கொண்டு, பொடிப் பொடியாகிப் போயினர்! கோட்டைகளெல்லாம் தரை மட்டமாகிவிட்டன; புல்முளைத்துவிட்டன! தோள்வலியும் வாள்வலியும் கொண்டோர் யாம்! தொடுத்திடுவோம் கணைகள் பல, எதிரிகள் சிரம் கொய்திட! என்று வீரம் பேசியோரெல்லாம், வீழ்ந்தடித்து ஓடினார்கள், அவன் ‘வேட்டு’க் கிளப்பியதும். கொச்சி திருவிதாங்கூரும், கோலமிகு மைசூரும், ஹைதராபாத்தோடு, அழகுமிகு ஜெய்ப்பூரும், போபாலும், பிகானிரும், போர்ப் புலிகள் நிரம்பிய பேரரசாம் மராட்டியமும், விருதுப் பெயர்களையே விண்முட்டும் அளவுபெற்ற எத்தனையோ அரசுகளும், எதைக்காட்டி வருவனவாம்? எதிர்த்தார் பிழைத்ததில்லை, தொழுதார் வாழ்ந்திடலாம், எனும் நிலையை யன்றோ! களம் நின்று கடும்போரிட்டு, வெற்றி பல பெற்று, வீரமரபினர் என விருதுபெற்றவர்கள் வீழ்ந்துபட்டனர்; இவர்கள் மேடை அதிரப்பேசிக் காணப்போவது என்ன? சிறை! சித்திரவதை! தூக்குமேடை! இவைதாமே! இஃது அறியாமல், சுயராஜ்யம் எமது பிறப்புரிமை என்று சுலோகம் பாடுகிறார்களே!!