உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

உடல் கொண்டோன், கண்போன குதிரை ஏறிக் களம் செல்லும் கதைபோல; நீ எதிர்க்கிறாய், எமது நேரு அரசை! அதைப் படித்தேன் இதைப் படித்தேன் என்று கூறுகிறாய்; அறிவு பெறாமல், எதைப் படித்துத்தான் என்ன பலன்? நேரு பண்டிதரின் அருமை பெருமை அறியாமல், அவராற்றிய அருஞ்செயல்கள் தெரியாமல், அவரை எதிர்க்கக் கிளம்பினால், அப்படிப்பட்டவனை, ‘அவன் அறியமாட்டான், அந்த அஞ்சா நெஞ்சுடை ஆற்றலரசின் வீரத்தை,’ என்று எண்ணிப், பரிதாபப்படலாம். நீயோ, அதை நான் அறிந்திருக்கிறேன் என்கிறாய் — அறிந்தும் எதிர்க்கத் துணிகிறாயே! இது ஏமாளித்தனம் மட்டுமல்லவே—முழுக்க முழுக்க முட்டாள் தனமல்லவா? —என்று காங்கிரசாருக்குக் கேட்கத் தோன்றும். சிலர் இதுபோலப் பேசவும் செய்கிறார்கள். பாடக்கூடச் செய்கிறார்கள்.

பாவம், அவர்கள், பண்டித நேருவின் வல்லமைக்கு நான் அறைகூவல் விடுவதாக எண்ணிக்கொண்டு, அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

அவர்கள், பண்டித நேருவின் வலிவை மட்டுமே நம்பிப் பிழைத்துத் தீரவேண்டியவர்களாக இருப்பதால், அவருடைய வல்லமையை எவரேனும் மதிக்காவிட்டால், மருளுகிறார்கள் — எதிர்க்கத் துணிந்தால், திகைக்கிறார்கள்.

தம்பி! மிகப் பழங்காலத்தில் அல்ல, இரண்டொரு நூற்றாண்டுக்கு முன்பு வரையில்கூட, ஐரோப்பாக் கண்டத்து நாடுகளில், காதல் விவகாரச் சண்டையிலிருந்து, நாட்டுப் பிரச்சினைபற்றி எழும் சச்சரவு வரையில், ஒருவருக்கொருவர், வாட்போர் புரிந்துகொள்வதன்மூலம் தீர்த்துக்கொள்வார்கள். அது மிகவும் போற்றப்பட்டு வந்த முறையாகவும் கொள்ளப்பட்டது சில நாடுகளில். அந்த முறையைச் சில நாடுகளில் தடுக்கச் சட்டம் இயற்றினர்; இயற்றியும் அந்த முறையைச் சிலர் துணிந்து மேற் கொண்டனர்.

அதுபோன்றது அல்ல, இன்று, நடைபெறும் விடுதலைப் போராட்டங்கள்.

எனவே, இதிலே, தனி மனிதர்களின் தாக்கும் சக்தி, தாங்கும் சக்தி, போர்த் திறமை, போர்க் கருவிகள், என்பவைகளுக்கு இடமில்லை.