உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

வென மேல்பக்கம் கிளம்பி, மற்றோர் வெடிப்பு வழியாக வெளியே வந்து, பழையபடி ஆறாகி ஓடுகிறது! விடுதலை இயக்கமும் அப்படித்தான். வெளியே நடமாடவிடாதபடி தடைபோட்டு விடுவதாலே, உணர்ச்சி அழிந்து போய்விடாது! இடம் பார்த்து, காலம் பார்த்து, வழிபார்த்து, பெருக்கெடுத்து ஓடிவரும். எத்தனை முறை, வெள்ளைக்காரக் கவர்னர்கள் சீமைக்குச் சேதி அனுப்பினார்கள்—“காங்கிரஸ் தலைகாட்டுவதில்லை! கல்லறையில் கிடக்கிறது!” என்று. பார்த்தவர்களும் இருக்கிறார்கள், அதுபற்றிப் படிப்பவர்களும் புரிந்துகொள்வார்கள்!

சச்சரவுகளால் கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார், காமராஜர்.

அவர் போன்றாரின் வெளிப்படையான பேச்சைக் கேட்ட பிறகும், கொள்கையில் உறுதிபடைத்த தோழர்கள், கழகத்திலே பேத உணர்ச்சியை மூட்டிவிடுவார்கள் என்று நான் எண்ணவில்லை. அவ்விதம் நடந்து கொள்பவர்களால், ஏற்படும் சிதைவுகளையும் சரிப்படுத்திக்கொண்டு, கழகத்தின் கட்டுக்கோப்பைக் காத்து நிற்கும் கர்மவீரர்களின் எண்ணிக்கை மிகப் பெரிது !

எனவே புலித் திட்டமாயினும் கழுகுத் திட்டமாயினும் கழகத்தை ஏதும் செய்துவிடாது.

தம்பி! உனக்கு எப்போதாகிலும், நீர்கோர்த்துக் கொண்டதுண்டா? சளி பிடிக்கிறது என்பார்களே, அது? எனக்கு அந்தத் தொல்லை அடிக்கடி!

காய்ச்சல், கைகால் பிடிப்பு, வயிற்றுவலி என்று பலவிதமான நோய்கள் ஏற்பட்டால் ஒருவகையிலே நிம்மதிகூட என்று சொல்லலாம் ஏனெனில், ஏதும் செய்ய முடியாத நிலையில் படுத்துவிடுவோம். இந்தச் சளிபிடிப்பது இருக்கிறதே இது மிகமிகத் தொல்லை! படுக்க வைக்காது — வேலை செய்யும் நினைப்பைக் கெடுக்காது. ஆனால் வேலையிலே மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது, தும்மலாகி, மூக்கைத் துளைத்து, குடைந்து, ஆளைப் படாதபாடு படுத்திவிடும்! சாதாரணச் சளிதானே, என்பர் எவரும். மருத்துவரிடம் சொல்லக்கூடத் தோன்றாது! என்ன உடம்புக்கு என்றுகூட எவரும் அக்கரையுடன் விசாரிக்கமாட்டார்கள். நாமாகக் கூறினால்கூட, “சளிதானே! இதற்கா இந்தப் பாடுபடுத்துகிறாய்!” என்று அலட்சியமாகக் கூறிவிட்டுச் செல்வார்கள்.