உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

காளி மறுத்தால்கூட, நான் மறுக்கமாட்டேன்; அவ்வளவு தொல்லை தருவது சளி.

நமது கழகத்திலே காய்ச்சல், குன்மம், கைகால் பிடிப்பு, போன்ற கடுமையான நோய் எதுவும் இல்லை! ஆனால், சளி பிடித்துக்கொள்கிறது, அடிக்கடி! தொல்லையான நோய்!

ஆனால், எனக்கே இயல்பாக, அடிக்கடி சளி பிடித்துக் கொள்வதால், இந்தச் ‘சளி’த் தொல்லையையும், நான் கூடுமான வரையில் தாங்கிக்கொள்கிறேன். அது நிமோனியா காய்ச்சல் ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்கிறேன். ஆனால், அதனால், எத்தனையோ மிக முக்கியமான வேலைகள் கெடுகின்றன! தடைபடுகின்றன.

காமராஜரோ, இந்தக் சளியே கழகத்தைக் கொன்றுவிடும் என்கிறார்.

மருத்துவர்கள் மறுத்து உரைப்பார்கள்; கழகத்தின் நடவடிக்கைகளிலே பொறுப்பேற்றுக்கொண்டுள்ளநான், தம்பி! உன் ஒத்துழைப்பால், நிலைமைகளைத் திருத்திவிட இயலும் என்று நம்புகிறேன். என்றாலும், எனக்குத் தெரியும், மற்ற வியாதிகள் ஆபத்தானவை, சளி அசிங்கமானது! எனவே, அதற்காக, அது பிடிக்காதபடி பார்த்துக்கொண்டாக வேண்டும்.

விவரமறிந்த எவரும், ஒரு விடுதலை இயக்கத்திலே. சரிவு சச்சரவு, சோர்வு தோல்வி, கலக்கம் மயக்கம், போட்டி பொறாமை சிற்சில வேளைகளிலே மூண்டுவிடுவதால், அந்த விடுதலை இயக்கமும், விடுதலை உணர்ச்சியும் அடியோடு அழிந்து போய்விடும் என்று கூறமாட்டார்கள்; எண்ணிக்கொள்ளவும் மாட்டார்கள்.

சூரத் காங்கிரஸ் மகாநாட்டிலே ஏற்பட்ட செருப்பு வீச்சுகளைவிடக் கேவலமாகவா, வேறொன்று இருக்கமுடியும்.

அப்போது இருந்த காங்கிரஸ் தலைவர்களெல்லாம். சாதாரணமானவர்களா!!

திலகர் நடத்திச் சென்ற காங்கிரசில், ‘சூரத்’ நடந்தது! அதனால் காங்கிரசார், காவி உடுத்திக் கமண்டல மேந்திக் கடும்தவம் செய்யக் காசிக்கா போய்விட்டார்கள்! அல்லது காமராஜர் நமது கழகத்தைபற்றிக் கூறுகிறாரே, அதுபோலக் காங்கிரஸ் அழிந்தா போய்விட்டது? ஆத்திரத்தில் அறிவிழந்-