99
தனர். கடமை மறந்தனர். உரிமைக்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இலட்சியம் பெரிது, கட்சியிலே நமக்குத் தரப்படும் இடம் பெரிதா அல்லவா என்ற எண்ணம் எழக்கூடாது என்பது மறந்தனர், சச்சரவில் ஈடுபட்டனர். பிறகு, ஊரே கூடிப் புத்தி சொல்லிற்று! வெட்கப்பட்டனர்! தமக்குள்ளே ஏற்பட்டுவிட்ட பிளவு கண்டு ஏகாதிபத்தியம் எள்ளி நகையாடக் கண்டனர், நிலைமை புரிந்தது; மனம் திருந்திற்று; காங்கிரசில் மீண்டும் கண்ணியமும் கட்டுப்பாடும் நிலைத்தது! வெற்றி கிடைத்தது.
சூரத் காங்கிரசில், தலைவர்களே ஒருவர்மீது ஒருவர் மிதியடிகளை வீசிக்கொண்டு, கலாம் விளைவித்துக் கொண்ட சம்பவம் குறித்து, வைசிராய், கவர்னர்கள் மாநாடு கூட்டிப் பேசி இருந்தால், பம்பாய் மாகாணக் கவர்னர் என்ன சொல்லியிருப்பார், “காங்கிரசைப் பற்றித் துளியும் கவலைப்படத் தேவையில்லை. அதிலே பிளவு, பேதம், சண்டை சச்சரவு! சூரத் சம்பவம் தெரியுமல்லவா? நாம் அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது தன்னாலே அழிந்துவிடும்.” என்றுதானே கூறியிருப்பார்.
அதேதான், காமராஜர் இப்போ பேசியிருப்பது.
பேச்சு, இயல்பினால்கூட, அமைந்ததல்ல, இடத்தால் அமைகிற பேச்சு!
அத்தனை முதலமைச்சர்கள் கூடிப் பேசுமிடத்தில், தி. மு. கழகம் பற்றிய பிரச்சினை வரும்போது, “ஆமாம்! ஆமாம்! தி. மு. கழகம் வளர்ந்துவிட்டது! நாட்டுப்பிரிவினை பற்றிய பேச்சு எங்கும் பரவிவிட்டது! நாங்கள் செய்யும் எதிர்ப் பிரசாரம் பலன் அளிக்கவில்லை. எம்மால் அந்தக் கழகத்தை ஏதும் செய்யமுடியவில்லை—” என்றா ஒரு முதலமைச்சர் பேசமுடியும் !எதிர்பார்க்கத்தான் செய்யலாமா, அவ்விதம் பேசுவார் என்று! கொஞ்சம் மீசையை முறுக்கிக் கொண்டு, கனைத்துவிட்டு, ஒரு அலட்சியப் புன்னகையுடன், “தி. மு. கழகம் ஒன்றும் இல்லை. அது தன்னாலே சாகும்!” என்றுதான் சொல்லத் தோன்றும்.
ஆகவே, தம்பி! காமராஜர் அங்கு அவ்விதம் பேசியது கேட்டு, யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை! கவனிக்கத் தேவையுமில்லை. ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்தியப் பேரரசு நமது கழகத்தின்மீது குறி வைத்துவிட்டது என்பதுதான்!