100
சந்தைச் சதுக்கத்துப்பேச்சு, சட்டசபைவரையில் போய்ச் சேர்ந்தது என்று இருந்தோம்.
மற்றோர் கட்டம் இது! இந்தியப் பேரரசு முதலமைச்சர்கள் மாநாடு கூட்டி, தி. மு. கழகத்தை ஒழித்தாகவேண்டும் என்ற துடிப்பை வெளிப்படுத்தி, விதவிதமான திட்டம் தீட்டியது.
“தலையைக் கொண்டுவருபவர்களுக்கு இனாம் தரப்படும்!” என்ற அளவுமட்டும் எழுதிக் தொகைபற்றி ஒருமித்த முடிவு ஏற்படாததால், அதனைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டதுபோல, என்று வைத்துக்கொள்ளேன்.
தி. மு. கழகத்தின் வளர்ச்சியும், திராவிடநாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்துக்குச் செல்வாக்கும், எந்த அளவுக்கு என்றால், முதலமைச்சர்கள் மாநாட்டிலே, கூடிப் பேசவேண்டிய நிலைமைக்கு இந்தியப் பேரரசைக் கொண்டு வந்து விட்டுவிட்டது.
“அதெல்லாம் வீண்புரளி; வேண்டாம்! உங்கள் கழகத்தைப்பற்றி ஒன்றும் முதலமைச்சர்கள் கூடிப்பேசவில்லை. ‘அசாம்’ பஞ்சாப் ஆகிய இடங்கள்பற்றிப் பேசினார்கள்; அந்தப் பேச்சோடு பேச்சாக, தமிழ்நாடு பற்றிய பேச்சும், தி. மு. க. பற்றியும், எழுந்தது; அவ்வளவு தான்.”—என்று பேசுவர், காங்கிரஸ் பேச்சாளர்.
தம்பி! முதலமைச்சர்கள் மாநாட்டிலே, அசாம், பஞ்சாப் பற்றிப் பேசினது உண்மை; பேசவேண்டிய விதமான நிலைமைகள், நெருக்கடிகள் அங்கே! வங்காளியும் அசாமியனும் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மடிகிறார்கள். ‘ஜெய்ஹிந்த்’ முழக்கமிட்டபடி!! பாஞ்சாலத்தில், எந்தவிநாடி என்ன நடக்குமோ என்று பீதி கொள்ளத்தக்க நிலைமை. எனவே, சட்டம் சமாதானம் காத்திட, அவைபற்றிப் பேச எண்ணம் எழும்.
தமிழ்நாடு நிலைமை அதுவல்ல. இங்கு தி. மு. கழகம் எந்தவிதமான கிளர்ச்சியிலும் இப்போது ஈடுபட்டிருக்கவில்லை. அமைதியான பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பஞ்சாபில் கிளர்ச்சி, அசாமில் அமளி! அவைபற்றிப் பேசும்போது, தி. மு. க. குறித்து, ஏன் எண்ணம் பாய வேண்டும்?