உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

அந்தக் கிளர்ச்சி—அமளி ஆகியவைகளைவிட, தி. மு. கழகம் நடத்திவரும் திராவிடநாடுபற்றிய பிரசாரம், தொடர்ந்து, கட்டுப்பாடாக, பட்டிதொட்டிகளிலும், வேகமாகவும் வெற்றிகரமாகவும், கேட்போர் உள்ளத்தைத் தொடத்தக்க விதத்திலும் நடைபெற்றுக்கொண்டு வருவதுதான், உண்மையில், இந்தியப் பேரரசு எனும் ஆதிக்கத்தின் சல்லி வேரினை அரித்துக்கொண்டு வருகிறது என்பது, அவர்களுக்குப் புரிகிறது; எனவே கவலை குடைகிறது.

கழகத்திலே அவ்வப்போது ஏற்பட்டுவிடும் ‘நலிவுகள்’— கழகத்தின் ‘தேர்தல்’ வேலையை வேண்டுமானால் ஓர் அளவுக்குப் பாதிக்குமேயன்றி, கழகம் மேற்கொண்டுள்ள, நாட்டு விடுதலைக்கு மக்களைப் பக்குவப்படுத்தும், காரியத்தைக் கெடுக்காது. தடுக்காது என்பதை, யூகமுள்ள காங்கிரஸ் தலைவர்கள் அறிந்து கொண்டுள்ளனர். இதனை நம்மிலே ‘பிளவு’ ஏற்பட்டபோது, ஊர் கூட்டிக் கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்த ஏடுகளே உணர்ந்து, “எதிர்பார்த்தபடி, தி. மு. கழகம் வலிவு இழக்கவில்லை; வேலை நிற்கவில்லை; விறுவிறுப்பாகத்தான் பணியாற்றுகிறது” என்று இப்போது எழுதிவிட்டன.

இந்தக் கழகத்தை யார் பொருட்படுத்துகிறார்கள்? இதனுடைய வறட்டுக் கூச்சலுக்கு எவர் செவிகொடுப்பார்கள்? என்றெல்லாம் பேசிய நிலை போயேவிட்டது! என்ன செய்து, இதை ஒழிப்பது என்று கலந்துபேசும் கட்டம் வந்து விட்டது.

இந்தக் கழகத்தை இனி யார் சீந்துவார்கள்! இதிலிருந்த வீரரும் தீரரும் விவேகியும் போய்விட்டார்கள், வெளியே! இனி இது இளைத்து ஈளைகட்டி இருமிச் சாகப்போகிறது என்று மேடைகளிலே காங்கிரசார் பேசிக்கொண்டிருக்கும் நிலை கண்டோம். ஆனால், முதலமைச்சர்கள் முகாம் அமைத்துத் திட்டம் தீட்டுகிறார்கள், தி. மு. கழகத்தை ஒழிக்க!

அடுத்து வர இருக்கும் தேர்தலில் வெற்றி—பெரிய அளவு கிடைத்து ஏற்படும் மகிழ்ச்சியைவிட, தம்பி! எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை இந்தச் சேதி தருகிறது!

நாம் கவனிக்கப்பட்டாகிவிட்டோம்! குறி வைத்துவிட்டார்கள்! பட்டபாடு வீண்போகவில்லை! பாரெல்லாம், நமது கழகம்